இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் மீனவர் கூட்டமைப்பு கண்டனம்

பரமக்குடி; ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கிறது என தமிழ்நாடு, புதுச்சேரி விவசாயிகள் மீனவர்கள் கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கூட்டமைப்பின் ராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளர் மலைச்சாமி கூறியதாவது: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதுடன், விசை படகையும் பறிமுதல் செய்து முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர். கடந்த 25 நாட்களில் 3வது முறையாக ஜூன் 28ல் 8 மீனவர்கள், ஒரு விசைப்படகு, ஜூலை 12ல் 7 மீனவர்கள் சென்ற விசைப்படகை உடைத்துள்ளனர். தொடர்ந்து 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

மார்ச் 14ல் செப்ரோஸ் வியாகுலம் என்ற மீனவர் மன்னார் நீதிமன்றத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்ட தொகை கட்டி விடுவிக்கப்பட்டிருக்கிறார். பஹல்காம் பயங்கரவாதிகள் பிரச்னையில் இந்தியா பாகிஸ்தான் உலக வங்கி முன்னிலையில் போடப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததைப் போல் தமிழ்நாட்டு மீனவர்களின் நலன் காக்க, கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

பிரதமர் மவுனம் கலைவதுடன், தமிழக முதல்வர் தீர்மானம் மட்டும் நிறைவேற்றுவதுடன் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளை கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தமிழக மீனவர் சொத்துக்களை பாதுகாக்க தமிழ்நாட்டின் 13 மாவட்டங்கள், புதுச்சேரி உட்பட 1076 கி.மீ., கடற்கரை நெடுகிலும் அனைவரையும் ஒருங்கிணைத்து கூட்டமைப்பினர் போராட தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

Advertisement