தி.மு.க.,வின் 'பி டீம்' விஜய்; அ.தி.மு.க.,வை உஷார்படுத்த பா.ஜ., திரட்டிய பகீர் தகவல்

17


சென்னை: கூட்டணியில் சேர, த.வெ.க., தலைவர் விஜய்க்கு, அ.தி.மு.க., தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. அதை, விஜய் ஏற்கவில்லை. 'தி.மு.க.,வின், 'பி டீம்' தான் விஜய்; எத்தனை முறை அழைத்தாலும், அவர் கூட்டணிக்கு வர மாட்டார்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் தெரிவிக்க, பா.ஜ., மேலிடம் ஆதாரங்களை திரட்டி வருகிறது.


இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் எட்டு மாதங்களே உள்ளன. தேர்தல் நெருக்கத்தில், கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்த்தால், அக்கட்சிகளின் தொண்டர்கள் இடையே, தேர்தல் பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்படுகிறது. இது, தேர்தல் வெற்றிக்கு உதவுவதில்லை என்பதை, உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட நம்புகிறார்.

எனவே தான் தேர்தலுக்கு ஓராண்டிற்கு முன்னதாக, கூட்டணியில் கட்சிகளை சேர்த்து, தேர்தலுக்குள் அக்கட்சிகளின் தொண்டர்கள் இடையிலான உறவை பலப்படுத்த, அமித் ஷா விரும்பினார். இதற்காகவே, கடந்த ஏப்ரலில், சென்னை வந்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து, இரு கட்சிகளின் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.



த.வெ.க.,வை கூட்டணியில் சேர்க்க, விஜயுடன் பா.ஜ., மேலிடம் பேச்சு நடத்தியது. அதை அவர் ஏற்கவில்லை. 'பா.ஜ., உடன் கூட்டணி இல்லை' என, அறிவித்து விட்டார். இருந்தபோதும், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கும் பழனிசாமி, விஜய்யை கூட்டணிக்கு வருமாறு தொடர்ந்து அழைப்பு விடுக்கிறார். அதை விஜய் பொருட்படுத்தவே இல்லை. தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ள விஜய், தன்னை முதல்வர் வேட்பாளராக கருதுகிறார்.


அ.தி.மு.க., கூட்டணிக்கு விஜய் உறுதியாக வர மாட்டார். ஏனெனில், அவர் தி.மு.க.,வின், 'பி டீம்' போல் செயல்படுகிறார். கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை வீழ்த்த மக்கள் நல கூட்டணியை அ.தி.மு.க., பயன்படுத்திக் கொண்டது போல, வரும் தேர்தலில், அ.தி.மு.க.,வை வீழ்த்த விஜயை பயன்படுத்த தி.மு.க., விரும்புகிறது.


அதாவது, தி.மு.க., அரசு மீதான அதிருப்தி ஓட்டுக்கள், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு சென்று விடக்கூடாது; அந்த ஓட்டுகளை விஜய் பிரிக்க வேண்டும் என்பதே தி.மு.க.,வின் எண்ணம்.இதையறிந்ததும், விஜயின் நகர்வுகள் அனைத்தையும் பா.ஜ., உன்னிப்பாக கவனித்து வருகிறது. 'தி.மு.க.,வுக்கு எதிராக கட்சி நடத்துங்கள்.



அதேநேரம், அ.தி.மு.க., உட்பட எந்த கட்சியுடனும், கூட்டணி சேரக்கூடாது. இதுவே, எங்கள் விருப்பம்' என, தி.மு.க., தரப்பில் இருந்து, விஜய்க்கு சொல்லப்பட்டிருக்கும் தகவலையும் பா.ஜ., தரப்பு அறிந்து கொண்டு விட்டது.


இவ்விபரங்களை பழனிசாமியிடம் தெரிவிப்பதோடு, 'விஜயை கூட்டணிக்கு அழைப்பதை விட்டுவிட்டு, கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து, தேர்தலை சந்திக்கலாம்' என, அவரைக் கேட்டுக்கொள்ள பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement