ஆக்கிரமிப்புகளால் வறண்ட தெத்துப்பட்டி கண்மாய்

கன்னிவாடி : ஆக்கிரமிப்பு, பராமரிப்பில் அலட்சிய பிரச்னைகளால் தெத்துப்பட்டி கண்மாய் வறண்டுள்ளது. வாய்க்காலில் நீர்வரத்து இல்லாமல் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து 15 ஆயிரம் ஏக்கர் சாகுபடி பணிகள் கடுமையாக பாதித் துள்ளன.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் டி.பண்ணைப்பட்டி அருகே தெத்துப்பட்டி கண்மாய் அமைந்துள்ளது. 250க்கு மேற்பட்ட ஏக்கரில் உள்ள இக்கண்மாய்க்கு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள நாயோடை, கோம்பை நீர்த்தேக்க மறுகால் வரத்து முக்கிய ஆதாரமாகும்.
வாய்க்காலை சுற்றிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் கூடுதல் வரத்து ஆதாரமாக உள்ளது. இங்கிருந்து 3 மதகுகள் மூலம் வெளியேறும் தண்ணீர் குடகனாறு வரை 20க்கு மேற்பட்ட கண்மாய்களை நிரப்பி செல்லும்.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கண்மாய் இப்பகுதியின் அதிக கொள்ளளவு கொண்ட கண்மாய்களில் முதன்மை இடம் பெற்றுள்ளது.
பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கண்மாயின் நீர் தேங்கும் பகுதி முழுவதும் மண் மேவி உள்ளது. மறுகால், ஷட்டர், வரத்து வாய்க்காலின் பெரும்பகுதியில் அதிக உயரத்திற்கு மண் மூடி உள்ளது. கிளை கால்வாய்கள் தண்ணீர் கடந்து செல்ல முடியாத அளவிற்கு துார்ந்துள்ளன.
சில ஆண்டுகளாக வறட்சி நீடிக்கும் இக்கண்மாய்க்கு தொடர் மழை நேரங்களில் கூட தண்ணீர் வரத்து இல்லை. பெருமளவு கண்மாய் பரப்பு விவசாய நிலமாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
எஞ்சிய பகுதி முழுவதும் சீமைக்கருவேல மரங்கள், புதர்ச்செடிகள் அடர்ந்துள்ளன.
இதனை மீட்டெடுக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை அவசியமாகிறது.
--கண்டு கொள்வதில்லை எல்.பி.ராஜூ, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர், ரெட்டியார்சத்திரம்: நாயோடை நீர்தேக்கம், பண்ணைப்பட்டி, கோம்பை கண்மாயில் இருந்து வரத்து தண்ணீர் கடந்து வருவதில் ஏராளமான தடைகள் உள்ளன.
வரத்து வாய்க்காலில் வரும் சொற்ப தண்ணீரும் இங்கு வந்து சேர வழி இல்லாத நிலை நீடிக்கிறது. இங்கிருந்து கிளை கால்வாய்கள் மூலம் சிறுநாயக்கன்பட்டி கண்மாய் துவங்கி குடகனாறு, மாங்கரையாறு வரை கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இதனைப் பராமரிப்பதில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் அணுகுகின்றனர்.
இதனால் 25க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
சிதைந்த வாய்க்கால் சக்திவேல்,மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர், ரெட்டியார்சத்திரம்: கண்மாயின் வரத்துநீரை மட்டுமே வழித்தட கண்மாய்களை சேர்ந்த விவசாயிகள் நம்பி உள்ளனர். ஆனால் இதன் பராமரிப்பை அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் கண்டு கொள்வதில்லை.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தபோதும் வெளியேறும் மறுகால் நீர் கண்மாயை வந்தடைவதில்லை.
கனமழை பெய்த போது வரத்து வாய்க்கால்கள் காணாமல் போனதால் தண்ணீர் வருவது முற்றிலுமாக தடைபட்டுள்ளது.
இந்த வழித்தடம் மட்டுமின்றி கண்மாயின் உள்பகுதியில் ஆக்கிரமிப்பு விவசாயம் தாராளமாக நடக்கிறது. இவற்றை மீட்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.
கண்மாய்க்கான அறிகுறியே இல்லாத அளவிற்கு மரங்கள், புதர் செடிகள் மண்டியுள்ளன. கண்மாயிலிருந்து செல்லும் கிளை கால்வாய்களின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளால் அகலம் குறுகியுள்ளது. கட்டுமான கற்கள் வாய்க்காலின் உள் சிதறி கிடக்கிறது.
மேலும்
-
இந்திய அணி நிதான ஆட்டம்; கவாஸ்கர் சாதனையை சமன் செய்த கே.எல். ராகுல்
-
யாரோ செய்த தவறுக்கு தேர்வுக்கு தயாரான இளைஞர்கள் பலியா: அண்ணாமலை கேள்வி
-
லாக்கப் மரண வழக்கு: தண்டனையை எதிர்த்த போலீசாரின் மனு தள்ளுபடி
-
வீரத்தின் விளை நிலம் ஆசாத்
-
பெங்களூரு பஸ் ஸ்டாண்டில் வெடிபொருட்களுடன் கிடந்த பை; பீதியில் மக்கள்
-
அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது: குஜராத் போலீசார் அதிரடி