வீரத்தின் விளை நிலம் ஆசாத்

உ.பி.,யில் உள்ள பதர்க்கா என்னும் ஊரில் பிறந்தவர் சந்திரசேகர சீதாராம் திவாரி.
பழங்குடி மக்களிடம் நெருங்கிப் பழகியதால் அவர்களிடம் இருந்து வில்வித்தையையும்,வீரத்தையும் பெற்றார்.
இவரை பெரிய அளவில் படிக்கவைத்து பண்டிதராக்க வேண்டும் என்பது அவரது தாயார் ஆசை ,ஆனால் இவருக்கோ அப்போது கொளுந்துவிட்டு எரிந்த தேசவிடுதலை எனும் தியாகவேள்வியில் தன்னை உருக்கிக்கொள்ளவே ஆசை.
15 வயதிலேயே ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார் இதன் காரணமாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது உன் பெயர் என்ன? உன் ஊர் என்ன? உன் எண்ணம் என்ன? என்ற அத்தனை கேள்விக்கும் ஒற்றை வரியில் 'ஆசாத்' என்று பதில் தந்தார், இந்தியில் ஆசாத் என்றால் சுதந்திரம் என்று அர்த்தம். இதனால் கோபமடைந்த நீதிபதி சிறுவன் என்றும் பாராமல் பிரம்படி கொடுக்க கட்டளையிட்டார்,ஒவ்வொரு முறை பிரம்படிபடும் போது 'பாரத் மாதா கி ஜெ' என்று உரக்க கோஷமிட்டார்.இதன் காரணமாக சந்திரசேகர திவாரியாக இருந்தவர் சந்திரசேகர ஆசாத் என்று பிரபலமானார்.
1922 ல் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை கைவிட்டார் ஆனால் ஆசாத் அதைகைவிட மறுத்து உறுதியாக நின்றார்.நாட்டிற்கான சுதந்திரத்தை எவ்வழியிலும் பெறவேண்டும் என்ற துடிப்பு கொண்டார்,இதற்காக சாட்ர்ச்சி என்ற என்பவர் ஆரம்பித்த இந்துஸ்தான் குடியரசு அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார் அவரை இணைத்துக் கொள்ளும்போது இந்த இயக்கம் மற்ற இயக்கங்கள் போல அல்ல, பல துன்புறுத்தலுக்கு உள்ளாகவேண்டியிருக்கும் என்றார்,உடனே ஆசாத் அங்கு எரிந்து கொண்டிருந்த விளக்கில் தனது கையை நீட்டி சிரித்துக் கொண்டே எரித்துக் காட்டினார்.
இயக்கத்தின் வளர்ச்சிக்காக பிரிட்டிஷ் அரசாங்கப் பொருட்களை, பணத்தை கொள்ளையிடவும் தலைப்பட்டார் நமது சொத்து நாம் திரும்ப எடுப்பதில் தவறு இல்லை என்றார், இதற்காக இதற்காக 1925 ஆம் ஆண்டு இவர் நடத்திய ககோரி ரயில் கொள்ளை இன்றளவும் பிரபலமாகும்.
ராணி லட்சுமிபாயின் வீரக்கோட்டையான ஜான்சி கோட்டையையே தனது இருப்பிடமாகவும் கொண்டார், பக்கத்தில் உள்ள காடுகளில் தனது அமைப்பினருக்கு சண்டைப் பயிற்சியை கற்றுக் கொடுத்தார்,அங்கே உள்ள அனுமன் கோவிலருகே கூடாரம் அமைத்து நீண்ட நாட்கள் அங்கு இருந்தே சுதந்திர இந்தியாவிற்கான காய்களை நகர்த்தினார்.அக்கம் பக்கம் உள்ள கிராமக்குழந்தைகளுக்கு பல்வேறுவித போர்ப்பயிற்சிகளை வழங்கியதால் கிராம மக்களின் நாயகனாக விளங்கினார்.
ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்காக துப்பாக்கி சுடும் பயிற்சி ,கார் ஓட்டும் பயிற்சி என்று பலவித பயிற்சிகள் பெற்றார்.இவர் பலவித புனைப்பெயர்களில் ஆஙகாங்கே சென்று ஆங்கிலேயர்களுக்கு இடையூறுகளை செய்தபடி இருந்தார் இதன் காரணமாக இவரை புரட்சியாளர் பட்டியலில் சேர்த்த பிரிட்டிஷ் அரசாங்கம் சுட்டுப்பிடிக்க தேடி அலைந்தனர், இந்த தேடுதல் வேட்டையில் இவரது நண்பர்கள் பலர் மடிந்தனர் இவர் மட்டும் தப்பியபடியே இருந்தார் விரைவில் தான் மடியநேரிடும் அதற்குள் பல வீர விதைகளை நடவேண்டும் என்பதற்காக பகத்சிங்,ராஜகுரு,சுக்தேவ் போன்றவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களை வளர்த்துவிட்டார்.
பிப்ரவரி 27, 1931 அன்று அலகாபாத் அல்ஃப்ரட் பூங்காவில் தன் இயக்கத்தவரான சுக்தேவ் உள்ளீட்டோருடன் பேசிக்கொண்டிருந்த போது,பிரிட்டீஷ் போலீசார் சுற்றிவளைத்தனர். இதைத் தெரிந்து கொண்ட ஆசாத், சுக்தேவ் உள்ளீட்ட நண்பர்களை தப்பியோடச் சொல்லிவிட்டு தான்மட்டும் தனியாக இருந்து பிரிட்டிஷ் போலீசாரை சமாளித்தார். கையில் வைத்திருந்த துப்பாக்கியால் எதிர்ந்து நின்றார்.துப்பாக்கியில் இருந்து ஒவ்வொரு குண்டும் ஒவ்வொரு இடத்தில் இருந்து பாய்ந்ததால் போலீசார் முன்னேற முடியாமல் தவித்தனர், இந்த சந்தர்ப்பத்தில் சுக்தேவ் குழுவினர் தப்பினர். இப்போது தனி ஆளாக ஆசாத் அந்த இடத்தில் துப்பாக்கியுடன் நிற்கிறார், அவரைச் சுற்றி போலீசார் சராமாரியாக சுடுகின்றனர், அந்த குண்டு மழையில் இருந்து தப்பியவர் கடைசியில் தன் கைத்துப்பாக்கியில் ஒரு குணடு இருக்கும் போது இவர்களிடம் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று முடிவு செய்து மிச்சம் இருந்த ஒரு குண்டால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்து போனார்.
அவர் பயன்படுத்திய துப்பாக்கி அலகாபாத் அருங்காட்சியகத்தில் இப்போதும் வைக்கப்பட்டுள்ளது.ஆசாத் இறந்த இடமான அல்ஃப்ரெட் பூங்கா நாடு சுதந்திரம் பெற்ற பிறகு சந்திரசேகர ஆசாத் பூங்கா என்று பெயரிடப்பட்டது.அவரது பெயரில் பள்ளிகள், கல்லூரிகள், வீதிகள் மற்றும் பொதுக்கழகங்கள் பல தொடங்கப்பட்டுள்ளன. இன்றளவும் வீரத்தின் விளைநிலமாக பள்ளி கல்லுாரி பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ளார்
அவரது பிறந்த நாள் இன்று.
-எல்.முருகராஜ்
மேலும்
-
ஈரோடு மாவட்ட ஊரக பகுதிகளில் 3.90 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
-
மூடப்பட்ட மாவட்ட சிறை கலெக்டர் - எஸ்.பி., ஆய்வு
-
கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ்: வீட்டின் மீது மோதியதில் சிறுமி பலி
-
குடிநீர் குழாய் சீரமைப்பு பணி: நெடுஞ்சாலையில் நெரிசல்
-
அதிக சத்தத்துடன் வட்டம் விமானத்தால் பதற்றம்
-
ஏரியில் வீசப்பட்ட குப்பை தொட்டிகள்