லாக்கப் மரண வழக்கு: தண்டனையை எதிர்த்த போலீசாரின் மனு தள்ளுபடி

மதுரை: தூத்துக்குடியில் 1999ம் ஆண்டு போலீஸ் ஸ்டேசனில் விசாரணை கைதி மரணமடைந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டி.எஸ்.பி., உள்ளிட்ட 4 போலீசார் தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும். ஜாமின் வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்த வழக்கை, ஐகோர்ட் மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தூத்துக்குடியில் கடந்த 1999ம் ஆண்டு வெடிகுண்டு வழக்கு தொடர்பாக, வின்சென்ட் என்பவரை தாளமுத்து நகர் போலீசார் கைது செய்தனர். விசாரணை கைதியாக போலீஸ் ஸ்டேசனில் இருந்த நிலையில் அதே ஆண்டு செப்., 18 ல் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
25 ஆண்டுகளுக்கு பிறகு 2024 ஜூன் மாதம் தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றம் எண் 1ல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 13 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது, 38 ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன், ஜெயசேகரன், சுப்பையா மற்றும் வீரபாகு ஆகியோர் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். ஜாமின் வழங்க வேண்டும் எனக்கூறி ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், ' இந்த வழக்கில் தவறுதலாக நாங்கள் சேர்க்கப்பட்டோம். விசாரணையை தாமதமாக நடந்தது' என தெரிவித்து இருந்தனர்.
இதனை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் பூர்ணிமா அமர்வு, 'வழக்கு தாமதத்திற்கு குற்றவாளிகள் தான் காரணம். கீழமை நீதிமன்றம் நேர்மையாக விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தண்டனையை நிறுத்திவைக்க எந்த காரணமும் இல்லை. லாக்கப் மரண வழக்கில், 2.5 தசாப்தங்களுக்கு பிறகு நீதி வழங்கப்பட்டு உள்ளது' எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
