பெங்களூரு பஸ் ஸ்டாண்டில் வெடிபொருட்களுடன் கிடந்த பை; பீதியில் மக்கள்

பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள பஸ் ஸ்டாண்ட் அருகே வெடிபொருட்களுடன் கூடிய பை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கலாசிபாளையம் பஸ் ஸ்டாண்ட்டில் இருக்கும் கழிவறைக்கு வெளியே மர்ம பை கிடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அதனை சோதனை செய்து பார்த்துள்ளனர்.
அப்போது, அதில், 6 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிகுண்டுகளை தயாரிக்கும் வெடிபொருட்கள் இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக, வெடிகுண்டு தடுப்பு பிரிவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து அந்தப் பையை மீட்டுச் சென்றனர்.
இது குறித்து மேற்கு பெங்களூருவின் டி.சி.பி.,கிரிஸ் கூறுகையில், "வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, இந்தப் பகுதி முழுதும் பாதுகாப்பு தீவிரப்பட்டது. உடனடியாக வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டனர். . இந்தப் பையை வைத்துச் சென்றது யார் என்பதை அறிய இங்குள்ள சி.சி.டி.வி., கேமராக்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது," என்றார்.