ஜெய்ஸ்வால், சுதர்சன் அரைசதம்: இந்திய அணி அபார ஆட்டம்

மான்செஸ்டர்: நான்காவது டெஸ்டில் இந்தியாவின் ஜெய்ஸ்வால், சுதர்சன் அரைசதம் விளாசினர்.

இங்கிலாந்து சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'ஆண்டர்சன் - சச்சின் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து, 2--1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு மைதானத்தில்நடக்கி

சுதர்சன் வாய்ப்பு: தொடரை கைப்பற்றும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள, இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது. இங்கிலாந்து அணியில் சோயப் பஷீருக்கு பதிலாக லியாம் டாசன் தேர்வானார். இந்திய 'லெவன்' அணியில் கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ஆகாஷ் தீப் நீக்கப்பட்டு தமிழகத்தின் சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர், அறிமுக அன்ஷுல் கம்போஜ் இடம் பிடித்தனர். இதனையடுத்து 2 தமிழக வீரர்கள் 'லெவன்' அணிக்கு தேர்வாகினர். 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், 'பவுலிங்' தேர்வு செய்தார்.

நல்ல துவக்கம்: இந்திய அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. பிரைடன் கார்ஸ் பந்தை ஜெய்ஸ்வால் பவுண்டரிக்கு விரட்ட, இந்திய அணி 17.4 ஓவரில் 50 ரன்னை கடந்தது. முதல் விக்கெட்டுக்கு 94 ரன் சேர்த்த போது வோக்ஸ் 'வேகத்தில்' ராகுல் (46) வெளியேறினார். கார்ஸ் பந்தில் ஒரு ரன் எடுத்த ஜெய்ஸ்வால், 96 பந்தில் அரைசதம் எட்டினார். எட்டு ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் போட்டிக்கு திரும்பிய டாசன் 'சுழலில்' ஜெய்ஸ்வால் (58) சிக்கினார்.

சுதர்சன் அபாரம்: ஸ்டோக்ஸ் பந்தில் கேப்டன் சுப்மன் கில் (12) அவுட்டானார். பின் இணைந்த சாய் சுதர்சன், ரிஷாப் பன்ட் ஜோடி நம்பிக்கை தந்தது. நான்காவது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்திருந்த போது வோக்ஸ் வீசிய பந்து தாக்கியதில் வலது காலில் காயமடைந்த பன்ட் (37), 'ரிட்டயர்ட் ஹர்ட்' முறையில் வெளியேறினார்.


ரூட் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சுதர்சன், டெஸ்ட் அரங்கில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இவர், 61 ரன்னில் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்டோக்ஸ், ரூட் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்தார் ஷர்துல் தாகூர்.

போதிய வெளிச்சமின்மையால் முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 264 ரன் எடுத்திருந்தது. ஜடேஜா (19), ஷர்துல் தாகூர் (19) அவுட்டாகாமல் இருந்தனர்.

பன்ட் காயம்இங்கிலாந்தின் வோக்ஸ் வீசிய 68வது ஓவரின் 4வது பந்து ரிஷாப் பன்ட்டின் வலது காலில் தாக்கியது. இதற்கு எல்.பி.டபிள்யு., கேட்கப்பட்டது. 'ரீப்ளே'யில் பந்து முதலில் பேட்டில் லேசாக உரசிச் சென்றது தெரிய வர 'அவுட்' வழங்கப்படவில்லை. எனினும், பந்து தாக்கியதில் வலது கால் சுண்டு விரலில் அருகே வீக்கம் ஏற்பட்டு, ரத்தம் வந்தது. இதனால் நிற்க முடியவில்லை. உடனடியாக சிறிய காரில் 'பெவிலியனுக்கு' அழைத்துச் செல்லப்பட்ட பன்ட், ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சமீபத்திய லார்ட்ஸ் டெஸ்டில் இவரது கை விரலில் காயம் ஏற்பட்டது.


ஐந்தாவது இந்தியர்
டெஸ்ட் அரங்கில், இங்கிலாந்து மண்ணில் 1000 ரன் எடுத்த 5வது இந்திய வீரரானார் ராகுல். இதுவரை 13 டெஸ்டில், 4 சதம், 2 அரைசதம் உட்பட 1032 ரன் குவித்துள்ளார். ஏற்கனவே இந்தியாவின் சச்சின் (1575 ரன்), டிராவிட் (1376), கவாஸ்கர் (1152), கோலி (1096) இம்மைல்கல்லை எட்டினர்.

கவாஸ்கர் வழியில்
டெஸ்ட் அரங்கில், எந்த ஒரு அன்னிய மண்ணில் 1000 அல்லது அதற்கு மேல் ரன் குவித்த 2வது இந்திய துவக்க வீரரானார் ராகுல். இவர், இங்கிலாந்தில் துவக்க வீரராக களமிங்கிய 12 டெஸ்டில், 1018 ரன் எடுத்துள்ளார். ஏற்கனவே இந்தியாவின் சுனில் கவாஸ்கர், 3 நாடுகளில் துவக்க வீரராக அசத்தினார்.

முதன்முறை
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டிக்கான இந்திய 'லெவன்' அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், ரிஷாப் பன்ட், ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் என, 5 இடது கை பேட்டர் இடம் பெற்றிருந்தனர். டெஸ்ட் வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணி 5 இடது கை பேட்டருடன் களமிறங்கியது. இதற்கு முன், 4 இடது கை பேட்டருடன் விளையாடியது தான் அதிகம்.

ஆயிரம் ரன்
டெஸ்ட் அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக 1000 ரன் எடுத்த 20வது இந்திய வீரரானார் ஜெய்ஸ்வால். இதுவரை 9 டெஸ்டில், 3 சதம், 5 அரைசதம் உட்பட 1003 ரன் எடுத்துள்ளார். இந்த இலக்கை குறைந்த இன்னிங்சில் எட்டிய இந்திய வீரர்கள் வரிசையில் 2வது இடத்தை (தலா 16 இன்னிங்ஸ்) முகமது அசாருடன் பகிர்ந்து கொண்டார் ஜெய்ஸ்வால். முதலிடத்தில் சச்சின், டிராவிட் (தலா 15 இன்னிங்ஸ்) உள்ளனர்.


பரூக், லாய்டுக்கு கவுரவம்
லங்காஷயர் கவுன்டி கிரிக்கெட் கிளப் சார்பில், முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பரூக் இன்ஜினியர், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிளைவ் லாய்டு கவுரவிக்கப்பட்டனர். முதல் நாள் போட்டிக்கு முன், மான்செஸ்டர், ஓல்டு டிரபோர்டு மைதானத்தின் 'கேலரி'க்கு இவர்களது பெயர் சூட்டப்பட்டது. தவிர இவர்கள், போட்டியை மணி அடித்து துவக்கிவைத்தனர்.

இரண்டாவது துவக்க வீரர்
மான்செஸ்டர், ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் ஒரு டெஸ்ட் இன்னிங்சில் 50 அல்லது அதற்கு மேல் ரன் விளாசிய 2வது இந்திய துவக்க வீரரானார் ஜெய்ஸ்வால் (58). இதற்கு முன், 1974ல் இங்கு, இந்தியாவின் கவாஸ்கர் 58 ரன் எடுத்திருந்தார்.

கம்போஜ் அறிமுகம்
இந்திய டெஸ்ட் அணியில் 318 வது வீரராக அறிமுகம் ஆனார் வேகப்பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் 24. ஹரியானாவை சேர்ந்த இவர், முதல் தர போட்டியில் 79 விக்கெட் (24 போட்டி) சாய்த்துள்ளார். பிரிமியர் தொடரில் சென்னை, மும்பை அணிக்காக களமிறங்கினார்.

Advertisement