சாய் சுதர்சன் முதல் அரைசதம்; காயத்தால் பாதியிலேயே வெளியேறிய பன்ட்

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் சாய் சுதர்சன் சதம் விளாசினார். இது அவரது முதல் சர்வதேச அரைசதமாகும். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் இன்று துவங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்சனும், ஆகாஷ் தீப், நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக, அன்சுல் கம்போஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு, கே.எல்.ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் சிறப்பான துவக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கே.எல்.ராகுல் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடி வரும் ஜெய்ஸ்வால் அரைசதம் (58) விளாசி அவுட்டானார். அதன்பிறகு, இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பை பெற்ற சாய் சுதர்சன் பொறுமையான ஆட்டத்தை கடைபிடித்தார். ஆனால், கேப்டன் கில் (12) ஏமாற்றம் அளித்தார்.
சாய் சுதர்சனுடன் துணை கேப்டன் பன்ட் ஜோடி சேர்ந்து விளையாடினார். 37 ரன்கள் எடுத்திருந்த போது, வோக்ஸ் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்றார். அப்போது, வேகமாக வந்த பந்து, பன்ட்டின் காலில் தாக்கியது. இதனால், வலியால் துடித்த பன்ட், மேற்கொண்டு விளையாட முடியாமல் போனது. எனவே, ரிட்டயர்டு ஹர்ட் முறையில் போட்டியின் பாதியிலேயே வெளியேறினார்.
அதன்பிறகு, சர்வதேச அரங்கில் முதல் அரைசதம் அடித்த சாய் சுதர்சன் 61 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்தில் அவுட்டானார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 264 ரன் எடுத்துள்ளது, ஜடேஜா (19), ஷர்துல் தாகூர்(19) அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர்.
ராகுல் சாதனை
இந்தப் போட்டியிலும் ராகுல் ரன் குவித்ததன் மூலம் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். அதாவது, வெளிநாட்டு மண்ணில் ,ஒரு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்களை கடந்த 2வது துவக்க வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்கு முன்பாக, இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் கவாஸ்கர், வெஸ்ட் இண்டீஸ் (1,404), இங்கிலாந்து (1,152), பாகிஸ்தான் (1,001) ஆகிய நாடுகளில் 1,000 ரன்களை விளாசி இருந்தார். தற்போது, அவரது ஒரு சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்துள்ளார்.
அதேபோல, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்களை கடந்த 5வது இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். டெண்டுல்கர் (1,575), டிராவிட் (1,376), கவாஸ்கர் (1,152), கோலி (1,096) ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர்.

மேலும்
-
தமிழகத்தில் உயர்கிறது தக்காளி விலை
-
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றம்: உயர்நீதிமன்றத்தில் தகவல்
-
பிரிட்டன் ஒப்பந்தத்தால் தொழில் துறை... உற்சாகம்! கோவை, திருப்பூர் ஏற்றுமதி அதிகரிக்கும்
-
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
-
ரூ.42 லட்சம் திருட்டு வழக்குவழக்கறிஞர் முன்ஜாமின் தள்ளுபடி
-
சி.பி.ஐ., அலுவலகத்தில் நிகிதா ஆஜர் மூன்றரை மணி நேரம் விசாரணை