உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் குடிநீர் இணைப்புக்கு பெயர் மாற்ற லஞ்சம்: அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை; 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் குடிநீர் இணைப்புக்கு பெயர் மாற்ற லஞ்சம் கேட்டு வக்கீலுக்கு ராசிபுரம் நகராட்சி ஊழியர் தொல்லை கொடுத்துள்ளதாக பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம்சாட்டி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் குடிநீர் இணைப்புக்கு பெயர் மாற்றக் கோரி விண்ணப்பித்த வழக்கறிஞர் ஒருவரிடம் நகராட்சி ஊழியர் ரகுபதி என்பவர் லஞ்சம் கேட்டு தொல்லை கொடுத்திருக்கிறார். தி.மு.க., ஆட்சியில் எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம் என்ற சூழல் நிலவும் நிலையில் அரசின் சேவைக்காக அரசு ஊழியர் லஞ்சம் கேட்டிருப்பது எந்த வகையிலும் அதிர்ச்சி அளிக்க வில்லை; மாறாக, தமிழகத்தில் நடைபெறுவது தி.மு.க., ஆட்சி என்பதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்திருக்கிறது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் எந்த புதுமையும் இல்லை; அரசு அலுவலகங்களில் இயல்பாக வழங்கப்பட வேண்டிய சேவைகளை, முகாம்களை நடத்தி காலதாமதமாக வழங்குவது தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்று தொடக்கத்திலிருந்தே குற்றஞ்சாட்டி வருகிறேன்.
குறைந்தபட்சம் இந்த முகாம்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது லஞ்சம் வாங்காமலாவது நடவடிக்கை எடுத்திருந்திருக்கலாம்.
ஆனால், அதைக் கூட செய்யாமல், குடிநீர் இணைப்புக்கு பெயர் மாற்றக் கோரி விண்ணப்பித்த ஒருவரின் மனுவில் இருந்த அவரது செல்பேசி எண்ணை தேடிக் கண்டுபிடித்து எடுத்து தொடர்பு கொண்டு லஞ்சம் வழங்கும்படி அரசு ஊழியர் கட்டாயப்படுத்துகிறார் என்றால் தமிழக அரசால் நடத்தப்படுவது 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களா அல்லது 'ஊழலுடன் ஸ்டாலின்' முகாம்களா? என்ற வினா தான் எழுகிறது.
மீண்டும் ஒருமுறை கூறுகிறேன், பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவிட்டு விளம்பரப்படுத்தி நடத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களால் தங்களுக்கு விளம்பரம் கிடைத்ததாக ஆளும் தி.மு.க., வேண்டுமானால் திருப்தி அடையலாமே தவிர, மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
மாறாக, இத்தகைய விளம்பரத் திட்டங்களுக்கு மாற்றாக சேவை உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அரசின் அனைத்து சேவைகளும் லஞ்சம் இல்லாமல் மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கும். எனவே, அதை உடனடியாகச் செய்து தி.மு.க., அரசு பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும்
-
6 மாதங்களில் 26,770 பேர்; சாலை விபத்துகளில் உயிரிழந்த பரிதாபம்!
-
சீனர்களுக்கு சுற்றுலா விசா: 5 ஆண்டுகளுக்கு பிறகு வழங்குகிறது இந்தியா
-
உலகின் டாப் 10 பட்டியலில் மும்பை விமான நிலையம்: தொடர்ந்து 3ம் ஆண்டாக சாதனை
-
பழனிசாமிக்கு யாரோ சொல்லித்தருகிறார்கள்: கண்டுபிடித்தார் திருமாவளவன்
-
இந்திய அணி நிதான ஆட்டம்; கவாஸ்கர் சாதனையை சமன் செய்த கே.எல். ராகுல்
-
யாரோ செய்த தவறுக்கு தேர்வுக்கு தயாரான இளைஞர்கள் பலியா: அண்ணாமலை கேள்வி