சீனர்களுக்கு சுற்றுலா விசா: 5 ஆண்டுகளுக்கு பிறகு வழங்குகிறது இந்தியா

பீஜிங்: சீனர்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை ஐந்தாண்டுகளுக்கு பிறகு இந்தியா துவக்குகிறது.
கடந்த 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து சீன நாட்டினருக்கு விசா வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. பிறகு கோவிட் பரவல் காரணமாக இந்தத் தடை நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்தியாவுக்கு வர மற்ற நாட்டினருக்கு விசா வழங்கப்பட்ட போதும், சீனர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல், சீனாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு மீண்டும் படிக்க வருவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்காமல் இருந்தது.
இதனிடையே இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் இரு தரப்பு உறவை மேம்படுத்தவது என முடிவு செய்யப்பட்டது. சமீபத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்றார்.
சமீபத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் வாங் யீயை சந்தித்து உரையாடினார்.
இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, சீனர்களுக்கு சுற்றுலா விசா வழங்கப்படும் என அந்நாட்டிற்கான இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், '' நாளை ( ஜூலை 24) முதல் இந்தியா செல்வதற்கு சீனர்கள் சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். முதலில் ஆன்லைன் முறையில் விசா கோரி விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு இந்திய விசா விண்ணப்ப மையத்தில் விசா விண்ணப்பம் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும்''. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சீன ஊடகம் வெளியிட்ட பதிவில், ' சீன குடிமக்கள் இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல சுற்றுலா விசா கோரி பீஜிங், ஷாங்காய், குவாங்சோ ஆகிய நகரங்களில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையங்களில் நேரில் சமர்ப்பித்து விசா பெறலாம். 2020 ம் ஆண்டு சுற்றுலா விசா சேவை நிறுத்தப்பட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் துவங்கப்பட்டுள்ளது, ' எனத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் குவா ஜியாகுன் கூறுகையில், இந்தியாவுடன் தொடர்ச்சியாக தொடர்பு கொள்ளவும் ஆலோசனை மேற்கொள்ளவும் நாங்கள் தயாராக உள்ளோம். இரு நாடுகளுக்கு இடையே மக்கள் இடையே பரிமாற்றங்களை எளிதாக்கவும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
உண்டியல் காணிக்கை திருட முயற்சி 2 சிறார் உட்பட 3 பேர் கைது
-
இன்னுயிர் காப்போம் திட்டம் ரூ 4.01 கோடியில் சிகிச்சை
-
தியாகதுருகம் மலை சுற்றுலா தலமாக... அறிவிக்கப்படுமா?: வரலாற்று சின்னங்கள் சிதையும் அவலம்
-
விளையாட்டு சங்கங்களுடன் கலெக்டர் ஆலோசனை
-
சிட்கோ இடத்தில் கட்டடம் கிராம மக்கள் எதிர்ப்பு
-
ஊஞ்சல் உற்சவம்