தி.மு.க., - அ.தி.மு.க., தாராளம்: தொண்டர்கள் 'குஷி'

தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க தி.மு.க., வும் எதிர் கட்சியான அ.தி.மு.க., வும் தீவிர களப்பணி ஆற்றி வருகின்றனர்.

மாவட்டத்தில் தி.மு.க., வினர் அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கியும், அ.தி.மு.க., வினர் கடந்த கால ஆட்சியில் செய்த சாதனை திட்டங்களை விளக்கி கூறியும் பிரசாரம் செய்து வருகின்றனர். தி.மு.க., வும், அ.தி.மு.க., வும் மாறி மாறி பிரசாரம் செய்து வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

மாவட்டத்தில் கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி என 9 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அரசியல் கட்சி நிர்வாகிகள் கடந்த சில நாட்களாக தொண்டர்கள், வாக்காளர்களை கவிர்ந்திட பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

குறிப்பாக, ஆடி மாத கோவில் திருவிழாக்களுக்கு நன்கொடை அளிப்பது, காதணி, விழா, மஞ்சள் நீராட்டு, திருமண விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சி நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்கின்றனர். துக்க நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்று நிவாரண உதவி வழங்குகின்றனர்.

இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது, முதியோர்களுக்கு மருத்துவ உதவிகள் என பணத்தை தாராளமாக செலவு செய்து வருகின்றனர். இதனால், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Advertisement