துணை ஜனாதிபதி தேர்தல் வரலாறு: 4 முறை மட்டுமே போட்டியின்றி தேர்வு

4

புதுடில்லி: நாட்டில் இதுவரை 16 முறை துணை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 4 முறை மட்டுமே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிகழ்வு நடந்துள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலில் 2007ம் ஆண்டு மட்டுமே மும்முனை போட்டி நிலவியது. அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரி, என்டிஏ வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லா மற்றும் 3வது அணி வேட்பாளர் ரஷீத் மசூத் ஆகியோரை எதிர்த்துப் போட்டியிட்டார்.

1952 முதல் 1962 வரை இரண்டு முறை துணை ஜனாதிபதியாகப் பணியாற்றிய சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், இரண்டு தேர்தல்களிலும் போட்டியின்றி வெற்றி பெற்றார்.

1979ம் ஆண்டில், பிரபல சட்ட வல்லுநரும் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியுமான முகமது ஹிதாயத்துல்லா துணை ஜனாதிபதியாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவின் தலைமை நீதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் தற்காலிக ஜனாதிபதியாக பணியாற்றிய தனித்துவமான பெருமையையும் ஹிதாயத்துல்லா பெற்றுள்ளார்.

1987ம் ஆண்டு, அப்போதைய மஹாராஷ்டிரா கவர்னர் சங்கர் தயாள் சர்மா, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றார்.

1974ம் ஆண்டு, பி.டி.ஜாட்டி துணை ஜனாதிபதி ஆனார். எதிர்த்துப் போட்டியிட்ட ஹோரோவை தோற்கடித்தார். ஜாட்டி 521 வாக்குகளைப் பெற்றார். ஹோரோ 141 வாக்குகளைப் பெற்றார்.

1984ம் ஆண்டு, துணை ஜனாதிபதி தேர்தலில் வெங்கடராமன் வெற்றி பெற்றார். அவர், பாபு சந்திரசென் காம்ப்ளேவை தோற்கடித்தார்.

1987ம் ஆண்டு தேர்தலில் சங்கர் தயாள் சர்மா துணை ஜனாதிபதியாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1992ம் ஆண்டு துணை ஜனாதிபதி தேர்தலில், செல்லுபடியாகும் 701 வாக்குகளில் 700 வாக்குகளை கே.ஆர். நாராயணன் பெற்றார். அவருக்கு எதிராக போட்டியிட்ட தார்த்தி பக்காத் என்று பிரபலமாக அறியப்படும் காகா ஜோகிந்தர் சிங் ஒரு வாக்கு மட்டுமே பெற்றார்.

1997ம் ஆண்டு, துணை ஜனாதிபதி தேர்தலில் கிருஷ்ண காந்த், சுர்ஜித் சிங்கை தோற்கடித்தார்.

2002ம் ஆண்டு, துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், காங்கிரஸ் வேட்பாளர் சுஷில்குமார் ஷிண்டேவை தோற்கடித்தார்.

2007ம் ஆண்டு, ஹமீத் அன்சாரி துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார், மேலும் 2012ம் ஆண்டு அப்போதைய யுபிஏ அரசாங்கத்தால் மீண்டும் நிறுத்தப்பட்டார்.

2012ம் ஆண்டு, அன்சாரி 490 வாக்குகளைப் பெற்று பாஜ வேட்பாளர் ஜஸ்வந்த் சிங்கை தோற்கடித்தார்.

2017ம் ஆண்டு, பாஜ தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தியை தோற்கடித்து துணை ஜனாதிபதியானார்.

2022ம் ஆண்டு, பாஜ தலைமையிலான என்டிஏ வேட்பாளர் ஜக்தீப் தன்கர், காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை தோற்கடித்தார்.

Advertisement