சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி.,க்கு நெஞ்சுவலி; மருத்துவமனையில் அனுமதி

12


மயிலாடுதுறை: சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில், போலீஸ் அதிகாரிகள் டார்ச்சர் செய்வதாக பேட்டி கொடுத்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை டி.எஸ்.பி., சுந்தரேசன் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கடந்த 1996ல் காவல் துறையில் எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்தவர் சுந்தரேசன். இவர், உளவுத்துறை, சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு என, பல பிரிவுகளில் பணிபுரிந்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளாக சென்னையில் உள்ள மாநில மனித உரிமை கமிஷன் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்தார்.

போலீசாருக்கு எதிராக அறிக்கை சமர்ப்பித்ததால், 2024ம் ஆண்டு அக்டோபரில் சுந்தரேசன் மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அப்போதே பிரச்னை எழுந்தது. மனித உரிமை கமிஷன் கட்டுப்பாட்டில் இருந்த சுந்தரேசன், ஒரு மாதத்திற்கு பின், மயிலாடுதுறைக்கு சென்று பணியில் சேர்ந்தார்.



அங்கு அவரது வாகனம் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் பறிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸ் அதிகாரிகள் டார்ச்சர் செய்வதாக சுந்தரேசன் பேட்டி கொடுத்தார். பின்னர், சீருடை பணியாளர் விதிகளை மீறி, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக, சுந்தரேசனை 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.


இந்த சூழலில், இன்று (ஜூலை 23) சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை டி.எஸ்.பி., சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement