புதிய பாட புத்தகம் தயாரிப்பு அண்ணா பல்கலையில் சிக்கல்

அண்ணா பல்கலையில் உரிய நேரத்தில் சிண்டிகேட் கூட்டம் நடக்காததால், புதிய பாடப்புத்தகம் வடிவமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அண்ணா பல்கலையில் இளநிலை முதலாம் ஆண்டுக்கு, இந்தாண்டு புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். இதற்கான பாடங்களை, பாடத்திட்ட குழு வடிவமைத்து, கல்வி குழுவான அகாடமிக் கவுன்சிலின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

அடுத்து, நிதிநிலை குழு மற்றும் ஆட்சிமன்ற குழுவான சிண்டிகேட் கவுன்சிலின் ஒப்புதல் கிடைத்தால், பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பணி துவங்கும்.

ஆனால் பல்கலையில், நிரந்தர துணைவேந்தர் இல்லாத நிலையில், வழிகாட்டுக் குழு ஒப்புதலுடன், இது நிறைவேற்றப்பட வேண்டும். அதிலும், அண்ணா பல்கலை சார்பில், வழிகாட்டுக் குழுவில் உள்ள பேராசிரியர், இந்த மாதத்துடன் ஓய்வு பெற உள்ளார்.

மேலும், அடுத்த மாதம் 15ம் தேதிக்குப் பின், முதலாம் ஆண்டுக்கான பாட வகுப்புகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிண்டிகேட் கூட்டம் இதுவரை கூடாததால், பாடத்திட்டக் குழு தவிப்பில் உள்ளது.

இதுகுறித்து, பேராசிரியர்கள் கூறியதாவது:

சிண்டிகேட் கூட்டம் நடத்துவது குறித்து, பல்கலை நிர்வாகம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடுவது குறித்து, முடிவு எடுக்க முடியாமல் உள்ளது. விரைவாக அதற்கான ஒப்புதலை பெற்றால்தான், பேராசிரியர்கள் அதற்கேற்ப தயாராக முடியும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.



- நமது நிருபர் -

Advertisement