மகளிர் தொகைக்கு விண்ணப்பம் நெற்குன்றத்தில் பெண்கள் ஆர்வம்

நெற்குன்றம், மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க, நெற்குன்றத்தில் நடந்த சிறப்பு முகாமில் பெண்கள் ஏராளமானோர் குவிந்தனர்.

வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம் 148வது வார்டு என்.டி.படேல் சாலையில் உள்ள மஹாலில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், நேற்று நடந்தது.

இதில், மகளிர் உரிமை தொகைக்கு, 10க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க வரும் பெண்களுக்கு, தனி வழியும் ஒதுக்கப்பட்டிருந்தது.

எனினும், இம்முகாமில் விண்ணப்பிக்க ஏராளமானோர் குவிந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அத்துடன், என்.டி.படேல் சாலையிலும் நெரிசல் ஏற்பட்டது.

இந்த முகாமை பார்வையிட்ட அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:

சென்னையில், 109 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட உள்ளது. வரும் நவ., மாதத்திற்குள் இந்த முகாம்கள் நடத்தி முடிக்கப்படும். முகாமில் 'சர்வர்' சுணக்கமாக இருந்தால் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுரவாயல் தி.மு.க., - எம்.எல்.ஏ., கணபதி, மண்டலக்குழு தலைவர் ராஜ், கவுன்சிலர் கிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement