பம்மல் - திருநீர்மலை சாலையில் சிறுபாலத்தை புதுப்பிக்க கோரிக்கை

பம்மல், ஜூலை 24-

பம்மல் - காமராஜபுரம் - திருநீர்மலை சாலையில், மூவேந்தர் நகரில், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிறுபாலத்தை இடித்துவிட்டு, புதிய சிறுபாலம் கட்டி, வெள்ளத்தில் இருந்து குடியிருப்புகளை பாதுகாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலம், பம்மலில், இரட்டை பிள்ளையார் கோவில் அருகே பிரிந்து செல்கிறது, பம்மல் - காமராஜபுரம் - திருநீர்மலை சாலை. அதிக போக்குவரத்து கொண்ட இச்சாலையில், மூவேந்தர் நகரில் சிறுபாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

மழை காலத்தில், மூவேந்தர் நகரில் தேங்கும் வெள்ளம், இச்சிறுபாலத்தை கடந்து, எல்.ஐ.சி., காலனி, அனகாபுத்துார் வழியாக, அடையாறு அற்றில் கலக்கிறது. காலப்போக்கில், பம்மல் பகுதியில் மழைநீர் கால்வாய் கட்டிய போது, இதை முறையாக பராமரிக்காமல் விட்டு விட்டனர்.

இதனால், மழை காலத்தில் தண்ணீர் செல்ல வழியின்றி, மூவேந்தர் நகரில் தேங்கி, மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த நிலையில், பம்மல் - திருநீர்மலை சாலையில், பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி முடிந்து, சாலையை சீரமைக்க தயாராக உள்ளனர்.

சாலை சீரமைக்கப்பட்டால், மூவேந்தர் நகரில் உள்ள சிறுபாலத்தை சீரமைக்கவோ, இடித்துவிட்டு புதிதாக கட்டவோ முடியாமல் போய்விடும்.

அதனால், சாலையை சீரமைக்கும் முன், சிறுபாலத்தை இடித்துவிட்டு, மழைநீர் செல்லும் வகையில் புதிதாக கட்டி, வெள்ளத்தில் இருந்து குடியிருப்புகளை பாதுகாக்க வேண்டும் என, அப்பகுதியில் வசிப்போர் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement