டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை: 2019 ல் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு சி.பி.ஐ.,விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்தெரிவிக்கப்பட்டது.
மேலுார் வழக்கறிஞர்ஸ்டாலின் 2020ல் தாக்கல் செய்த மனு:
டி.என்.பி.எஸ்.சி., சார்பில் 2019 ல் குரூப்-4 தேர்வு நடந்தது. இதில் முறைகேடு தொடர்பாக கீழ்நிலை அலுவலர்கள், போலீசார், புரோக்கர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்துள்ளனர். சில உயரதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி முறைகேடு நடக்க வாய்ப்ப்பில்லை. அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. பாரபட்சமின்றி சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க வாய்ப்பில்லை. டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு முறைகேடு தொடர்பாக பதிவான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ.,விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இதுபோல் மதுரை ரமேஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.
டி.என்.பி.எஸ்.சி., தரப்பு வழக்கறிஞர் பன்னீர்செல்வம், 'இதுபோல் தாக்கலான ஒரு வழக்கு அடிப்படையில் 2021 டிச.,14 ல் இந்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது,' என்றார்.
நீதிபதிகள், 'ஏற்கனவே நடவடிக்கை துவங்கியுள்ளதால் இம்மனுவில் மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கு முடிக்கப்படுகிறது,' என உத்தரவிட்டனர்.