பிரிட்டன் ஒப்பந்தத்தால் தொழில் துறை... உற்சாகம்! கோவை, திருப்பூர் ஏற்றுமதி அதிகரிக்கும்

லண்டன் சென்ற பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மரை சந்தித்து பேசினார். இரு நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பிரிட்டன் அமைச்சர் ஜொனாத்தன் ரெனால்ட்ஸ் கையெழுத்திட்டனர்; இது, வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒப்பந்தமாக கருதப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை கோவை, திருப்பூர் தொழில் துறையினர் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.
சக்திவேல், துணை தலைவர், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) : இந்தியா - பிரிட்டன் இடையே வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு மிக்கது. பிரதமர் மோடி, மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ்கோயலுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி துறையின் எதிர்காலம் வளம் பெறும். இந்திய ஜவுளி, துணி, ஆயத்த ஆடை உற்பத்தி துறைக்கு திருப்புமுனையாக அமையும். நமது நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றும் நோக்கத்தின் முக்கியமான படிக்கட்டு.
இந்த ஒப்பந்தத்தால், 99 சதவீத இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு, பிரிட்டனில் சுங்க வரி விலக்கு அல்லது குறைந்த வரி விதிக்கப்படும். உணவுப்பொருட்கள், ஆடை, காலணி, நகை உள்ளிட்ட துறைகள் பயன்பெறும். தற்காலிக பணிக்காக பிரிட்டன் சென்றுள்ள இந்திய தொழிலாளர்கள் தேசிய கட்டணம் செலுத்த தேவையில்லை.
திருப்பூர், சூரத், லுாதியானா, புனே, சென்னை, குஜராத், மேற்கு வங்கம், அசாம் ஆகிய நாட்டின் முக்கியமான உற்பத்தி மையங்களுக்கு, பிரிட்டனிலிருந்து ஆர்டர் வருகை அதிகரிக்கும். சுங்க கட்டண சலுகைகளால், பிரிட்டன் சந்தையில், வங்கதேசம், வியட்நாம், சீனா போன்ற நாடுகளுடனான இந்தியாவின் போட்டித்திறன் அதிகரிக்கும். இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும்.
தற்போது ஆண்டுக்கு, 12,325 கோடி ரூபாயாக உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி, இந்த ஒப்பந்தத்தால், 27,625 கோடி ரூபாயாக இரு மடங்கு உயரும். நெசவு துணி ஏற்றுமதி, 6,800 கோடி ரூபாயிலிருந்து, 17 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜவுளி தொழில் மேம்படும் சக்திவேல், தலைவர், விசைத்தறி ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு கவுன்சில்: மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' மற்றும் 'விக்சித் பாரத் - 2047' தொலைநோக்கு திட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், பிரிட்டனுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, விசைத்தறி மற்றும் ஜவுளி உற்பத்தி துறைக்கு மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு மைல்கல். பெட்ஷீட், திரைச்சீலை உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட ஜவுளி பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். சிறு குறு நிறுவனங்களின் ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்வதுடன் பிரிட்டன் முழுவதும் பிரீமியம் சந்தைகளில் நுழையும் வாய்ப்பாக அமையும்.
ஐரோப்பாவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அதற்கு முன்னதாகவே, பிரிட்டனுடன் ஒப்பந்தம் நிறைவேறியுள்ளது. சுங்க வரிகள் நீக்கப்படுவதன் காரணமாக பிற நாடுகளுடனான போட்டியை எளிதில் சமாளிக்க முடியும். தற்போதைய சூழலில் ஜவுளி உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரிக்கும்.
தமிழகத்துக்கு 40 சதவீத பலன் பிரபு தாமோதரன், கன்வீனர், இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ஐ.டி.எப்.,): இந்த ஒப்பந்தத்தால், பிரிட்டன் ஜவுளி சந்தையில் 6 சதவீதத்தைக் கொண்டுள்ள இந்தியா, மிக விரைவில் 10 சதவீதத்தை எட்டும். ஆண்டுக்கு ரூ. 7,000 கோடி வரை கூடுதல் வர்த்தகம் நமக்கு கிடைக்கும். இதில் 40 சதவீதம் தமிழகத்துக்கு கிடைக்கும். ஜவுளி உற்பத்திக்கான மூலப்பொருள் முதல் அனைத்து உள்ளீடுகளும் இந்தியாவிலேயே இருப்பதால், பிரிட்டன் வர்த்தகர்கள் இந்தியாவையே சாதகமான அம்சமாக பார்க்கின்றனர்.
கார்த்திகேயன், தலைவர் கொடிசியா: உயர் ரக கார்களின் விலை குறைய வாய்ப்பிருக்கிறது. கோவையில் இருந்து ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், இன்ஜி., பொருட்கள் ஏற்றுமதி இன்னும் அதிகரிக்கும். கோவை தொழில்முனைவோருக்கு இது பெரும் வாய்ப்பாக இருக்கும்.
அருள்மொழி, தலைவர், ஓஸ்மா: இந்த ஒப்பந்தம் இந்திய ஜவுளி துறை வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதனால் ஓ.இ., எனப்படும் ஓப்பன் எண்ட் மில் நுால்களில் இருந்து உற்பத்தியாகும் ஜவுளி பொருட்கள், துண்டு, திரைச் சீலைகள், மெத்தை, தலையணை உறை, தரை விரிப்பு, காடா துணி வகைகள், திருப்பூர் பின்னலாடை துணி வகைகள், கரூர் மேட்அப் ஜவுளிகள் போன்ற ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும். தற்போது ரூ.10,000 கோடியாக உள்ள ஆண்டு ஏற்றுமதி, ரூ.30,000 கோடியாக உயரும்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க வர்த்தக ஒப்பந்ததை நிறைவேற்றிய பிரதமர் மோடி, வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி
- நமது நிருபர் -.








மேலும்
-
பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
தனியார் ஹோட்டலுக்கு சாதகமாக தூண்கள் இடம் மாற்றம்; மேம்பாலத் துாண்களை இடிக்க உத்தரவு!
-
செஸ்: திவ்யா-ஹம்பி பலப்பரீட்சை; உலக கோப்பை பைனல் துவக்கம்
-
ஆந்திரா, தெலுங்கானாவில் கூடுதல் பாதை; தமிழகம் - டில்லி ரயில் பயண நேரம் குறையும்
-
ஞாயிற்றுக்கிழமைக்கு சிக்கன் பொட்லி
-
இனிப்பும், காரமும் கலந்த 'ஹனி கார்லிக்' சிக்கன்