தமிழகத்தில் உயர்கிறது தக்காளி விலை

சென்னை: அண்டை மாநிலங்களில் சாகுபடி குறைந்துள்ளதால், தமிழகத்தில் தக்காளி விலை திடீரென உயர்ந்து வருகிறது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கோவை, ஈரோடு, மதுரை, திண்டுக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், தக்காளி சாகுபடி நடந்து வருகிறது. ஆனால், மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு உற்பத்தி இல்லை.
எனவே, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து, தக்காளி விற்பனைக்கு வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, தக்காளி விளைச்சல் அண்டை மாநிலங்களில் கணிசமாக அதிகரித்தது. இதனால், போதிய விலை கிடைக்கவில்லை.
தமிழகத்திலும் தக்காளி விளைச்சல் அதிகரித்து, கிலோ, 15 முதல், 20 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், விவசாயிகள், வியாபாரிகள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை.
எனவே, கர்நாடகா, ஆந்திரா, மாநிலங்களில், தக்காளி சாகுபடியை விவசாயிகள் குறைத்துள்ளனர். மாற்று பயிர் சாகுபடிக்கு மாறியுள்ளனர்.
சாகுபடி பரப்பு குறைந்துள்ள நிலையில், தற்போது அங்கு தக்காளி அறுவடையும் வெகுவாக குறைந்துள்ளது. அறுவடையாகும் தக்காளியும், சாறு தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
இதன் தாக்கம், தமிழகத்தில் எதிரொலிக்க துவங்கியுள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், கிலோ நாட்டு தக்காளி சில்லரை விலையில், 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் வரை கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி, தற்போது விலை உயர்ந்து வருகிறது.
இதுகுறித்து, சென்னை கோயம்பேடு சந்தை தக்காளி மொத்த வியாபாரி எம்.டி.ஆர்., தியாகராஜன் கூறியதாவது:
கோயம்பேடு சந்தைக்கு கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து, 90 சதவீத தக்காளி விற்பனைக்கு வருகிறது. தமிழகத்தில் இருந்து வருவது குறைவு. நாள்தோறும் 70 முதல் 100 லாரிகள் வரை தக்காளி வரத்து இருந்தது. இப்போது, 50 லாரிகளாக குறைந்துள்ளது.
அதிக விளைச்சலால், போதிய வருவாய் கிடைக்காததால், கர்நாடகா, ஆந்திரா விவசாயிகள் சாகுபடியை மாற்றியதே இதற்கு காரணம். அடுத்தடுத்து பண்டிகை காலம் வருவதால், விலை உயருமா என்பது வரத்தை பொறுத்தே தெரியும்.
எனவே, தமிழகத்தில் தக்காளி சாகுபடியை அதிகரிப்பதற்கான முயற்சிகளை, தோட்டக்கலைத் துறையினர் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
@block_B@ அதிகாரிகளை 'அலெர்ட்' செய்த அரசு தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் துறையின் கீழ், விலை கண்காணிப்பு பிரிவு இயங்கி வருகிறது. இது, வெளிச்சந்தையில் அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கண்காணித்து வருகிறது. அவற்றின் விலை திடீரென உயரும் போது, விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்க, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கிறது. கடந்த ஆண்டு ஜூலையில் கிலோ தக்காளி, 100 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டது. இதனால், மக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கூட்டுறவு பண்ணை பசுமை காய்கறி கடைகள், பல்பொருள் அங்காடிகளில், 60 ரூபாய்க்கு தக்காளி விற்கப்பட்டது. தற்போது, தக்காளி விலை அதிகரித்து வருகிறது. எனவே, அதன் விலையை தொடர்ந்து கண்காணித்து, மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் வரும் பட்சத்தில், கூட்டுறவு அங்காடிகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்க, அதிகாரிகளை அரசு அறிவுறுத்தியுள்ளது. அதற்கு ஏற்ப, கூட்டுறவு வங்கிகள், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெற்று, தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் இருந்து, நேரடியாக தக்காளியை வாங்கி, காய்கறி கடைகளில் விற்க திட்டமிடப்பட்டு உள்ளது.block_B



மேலும்
-
படிக்கும் வயசில் படிக்கட்டு பயணம் எதுக்கு; மாணவர்கள் செயலால் டிரைவர்கள் தவிப்பு
-
அடுத்தடுத்த புயல்களால் பிலிப்பைன்சில் 25 பேர் பலி
-
சிறையிலிருந்து தப்பிய கைதி சில மணி நேரங்களில் கைது
-
பிரதமரின் வெளிநாட்டு பயணத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ.362 கோடி செலவு
-
தாய்லாந்து செல்ல வேண்டாம் இந்திய துாதரகம் அறிவுறுத்தல்
-
மாலத்தீவுக்கு ரூ.5,000 கோடி கடன் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு