சி.பி.ஐ., அலுவலகத்தில் நிகிதா ஆஜர் மூன்றரை மணி நேரம் விசாரணை

மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அஜித்குமார் 28, போலீஸ் விசாரணையின்போது கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக நேற்று மதுரை சி.பி.ஐ., அலுவலகத்தில் பேராசிரியர் நிகிதா, தாயார் சிவகாமியிடம் மூன்றரை மணி நேரம் விசாரணை நடந்தது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோயிலுக்கு வந்த நிகிதாவும், சிவகாமியும் நகை காணவில்லை என்று புகார் அளித்தனர்.

சந்தேகத்தின்பேரில் கோயில் காவலாளி அஜித்குமாரிடம் போலீசார் விசாரித்த போது அவர் இறந்தார். கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.கடந்த 11 நாட்களாக டி.எஸ்.பி., ரோஹித்குமார் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.

இதுவரை அஜித்குமாரின் தம்பி நந்தகுமார், நண்பர்கள், சக ஊழியர்கள், முதலுதவி அளித்த டாக்டர், நர்ஸ் ஆகியோரிடம் விசாரணை நடந்தது.

நேற்று பேராசிரியை நிகிதா, அவரது தாயாரிடம் மூன்றரை மணி நேரம் விசாரணை நடந்தது. பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்று அஜித்குமார் உடலை கூராய்வு செய்த டாக்டர்கள், ஊழியர்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்தனர்.

Advertisement