ரூ.42 லட்சம் திருட்டு வழக்குவழக்கறிஞர் முன்ஜாமின் தள்ளுபடி

மதுரை: மதுரையில் பூட்டியிருந்த வீட்டில் ரூ.42 லட்சம் திருடுபோன வழக்கில் வழக்கறிஞர் சசிகுமாரின் முன்ஜாமின் மனுவை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரையில் அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சரின் பினாமி வீட்டில் ரூ.பல கோடி கொள்ளை போனது. இந்நிலையில் மதுரை விளாங்குடி மீனாட்சி நகரிலுள்ள ஜெயேந்திரன் சொந்த ஊரான தேனி மாவட்டம் போடிக்கு கோயில் திருவிழாவிற்கு குடும்பத்தினருடன் ஜூன் 17 ல் சென்றார்.

ஜூன் 21 ல் மதுரை வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. ரூ.42 லட்சம் திருடுபோயிருந்தது. கூடல்புதுார் போலீசார் வழக்கு பதிந்தனர். இதில் வழக்கறிஞர் சசிகுமார் மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிபதி சிவகடாட்சம் விசாரித்தார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: முதலில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது. பின் மனுதாரரை இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். தாமதமாக வழக்கு பதியப்பட்டதற்கு காரணம் இல்லை. முதலில் செல்லுார் போலீசில் வெறும் வழக்கு பதியப்பட்டு, அரசியல்செல்வாக்கு மூலம் பின்கூடல்புதுார் போலீசுக்கு மாற்றப்பட்டது.

ஒரு பெரிய அரசியல் கட்சி தலைவரின் வீட்டில் ரூ.42 லட்சம் திருடுபோனது. அதில் தொடர்புடைய ஒருவரை அரசியல் அழுத்தம் காரணமாக போலீசார் கைது செய்ய விரும்பினர். அவரை கண்டுபிடிக்க முடியாததால் ஒப்படைக்குமாறு மனுதாரரை மிரட்டினர். இல்லையெனில் மனுதாரரை இவ்வழக்கில் தவறாக சிக்க வைப்போம் என்றனர். சம்பவத்திற்கும் மனுதாரருக்கும் தொடர்பு இல்லை.

அரசு தரப்பு வழக்கறிஞர்: போலீசார் 4 பேரை கைது செய்தனர். முதலாவது எதிரியிடமிருந்து ரூ.5 லட்சத்தை மீட்டனர். மீதமுள்ள தொகை மீட்கப்படவில்லை. 2 பேர் தலைமறைவாக உள்ளனர். விசாரணை நிலுவையில் உள்ளது. மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். முன்ஜாமின் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு: குற்றத்தின் தன்மை, திருடப்பட்டதில் மீதமுள்ள தொகையை மீட்காதது, விசாரணையின் நிலுவையை கருத்தில் கொண்டு முன்ஜாமின் மனுதள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.

Advertisement