லஞ்ச வழக்கில் சிக்கிய 2 எஸ்.ஐ.,க்கள் 'சஸ்பெண்ட்' புதுச்சேரி டி.ஜி.பி., அதிரடி உத்தரவு
புதுச்சேரி: புதுச்சேரி, வில்லியனுார் பகுதியில் வசிக்கும் பெண், தனது 17 வயது மகளை கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று விட்டதாக, வில்லியனுார் போலீசில் புகார் அளித்தார். அப்போதைய சப் இன்ஸ்பெக்டர் சரண்யா விரைந்து நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் ஏற்படுத்தி உள்ளார். மறுநாள் அவரது தந்தை போலீஸ் ஸ்டேஷன் வந்து, மகள் கடத்தல் தொடர்பான முதல் தகவல் அறிக்கை கேட்டபோது, சப் இன்ஸ்பெக்டர் சரண்யா, அவரை அவதுாறாக பேசி, அனுப்பியுள்ளார்.
பின்னர் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா, மாயமான பெண்ணை தேடி செல்ல செலவிற்கு பணம் வேண்டும் என, பெற்றோரிடம் கேட்டுள்ளார். இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் சரண்யா அசாமில் இருந்தபோது, அவருக்கு, சிறுமியின் தந்தை ஜிபே மூலம் 5,000 ரூபாய் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, மகளை கண்டுபிடிக்க சட்ட விரோதமாக ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கடந்த ஆண்டு ஜூலை 6ம் தேதி டி.ஜி.பி.,விடம் புகார் அளித்தார்.
புகார் மனு மீது துறை ரீதியான விசாரணை நடந்து வந்த நிலையில், சப் இன்ஸ்பெக்டர் சரண்யாவின் கணவரான பாகூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சப் இன்ஸ்பெக்டர் பிரபு, மனைவி வாங்கிய 5,000 ரூபாயை போன் பே மூலம், சிறுமியின் தந்தை வங்கி கணக்கிற்கு அனுப்பினார். இதுகுறித்து, லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் சரண்யா, அதனை திரும்ப கொடுத்த சப் இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 1ம் தேதி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கிய சப் இன்ஸ்பெக்டர் சரண்யாவை சஸ்பெண்ட் செய்து, டி.ஜி.பி., ஷாலினி சிங் நேற்று உத்தரவிட்டார்.
இதேபோல், காரைக்கால், திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில், பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை மீண்டும் ஒப்படைக்க லஞ்சம் கேட்டு, சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமியையும் சஸ்பெண்ட் செய்து டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, லஞ்சம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்த சப் இன்ஸ்பெக்டர் சரண்யாவின் கணவர் பாகூர் சப் இன்ஸ்பெக்டர் பிரபு, திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்டபோது, பணியில் இருந்த தலைமை காவலர் பார்த்திபன், காவலர் விஜயபாலன் ஆகியோர் புதுச்சேரி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும்
-
படிக்கும் வயசில் படிக்கட்டு பயணம் எதுக்கு மாணவர்கள் செயலால் டிரைவர்கள் தவிப்பு
-
அடுத்தடுத்த புயல்களால் பிலிப்பைன்சில் 25 பேர் பலி
-
சிறையிலிருந்து தப்பிய கைதி சில மணி நேரங்களில் கைது
-
பிரதமரின் வெளிநாட்டு பயணத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ.362 கோடி செலவு
-
தாய்லாந்து செல்ல வேண்டாம் இந்திய துாதரகம் அறிவுறுத்தல்
-
மாலத்தீவுக்கு ரூ.5,000 கோடி கடன் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு