அறிவித்தபடி ஊதியம் வழங்க கோரிக்கை

சென்னை:'அமைச்சர் அறிவித்தபடி, துாய்மை பணியாளர்களுக்கு, மாத தொகுப்பூதியம், 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, ஆரம்ப சுகாதார நிலைய ஆர்.சி.எச். துாய்மை பணியாளர்கள் நல சங்கத்தினர், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, அச்சங்கத்தின் தலைவர் செல்வராஜ், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க செயலர் ரவீந்திரநாத் ஆகியோர் கூறியதாவது:

ஆரம்ப சுகாதார நிலையங்களில், துாய்மை பணியாளர்களாக பணியாற்றுவோருக்கு, மாத தொகுப்பூதியம், 1,500 ரூபாய் வழங்கப்படுகிறது.

இது 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, சட்டசபையில் அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார்.

கடந்த, ஏப்., மாதம் அறிவித்தாலும், இதுவரை நடைமுறைக்கு கொண்டு வரவில்லை. இதை செயல்படுத்த, அரசாணை வெளியிட்டு, ஏப்., மாதம் முதல் 5,000 ரூபாய் வழங்க வேண்டும்.

பணி மூப்பு அடிப்படையில், துாய்மை பணியாளர்களுக்கு, பல்நோக்கு பணியாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆக., 10ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement