புற்றுநோய் அதிநவீன சிகிச்சை மையத்துக்கு ரூ.25 கோடியில் உபகரணம்! அமெரிக்காவில் இருந்து திருப்பூருக்கு வந்தது

1

திருப்பூர்: திருப்பூரில், மக்கள் பங்களிப்புடன் அமைக்கப்பட்டு வரும் புற்றுநோய் சிகிச்சை மையத்தில், 25 கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணம், அமெரிக்காவில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புற்றுநோய் தாக்குதல் அதிகமுள்ள மாவட்டங்களின் வரிசையில் திருப்பூரும் இடம் பிடித்திருக்கிறது. புகையிலை பழக்கம், மது, சரியான உடற்பயிற்சி இல்லாதது, உணவு பழக்கம், நீர்நிலைகள் மற்றும் சுற்றுப்புறமெங்கும் சுகாதாரமற்ற சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், புற்றுநோய் பரவுகிறது என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையிலேயே புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. இருப்பினும், உயர் சிகிச்சை பெற கோவை, சென்னை, வேலுார் உள்ளிட்ட நகரங்களில் உள்ள மருத்துவமனைகளை, மக்கள் நாடி செல்கின்றனர். இந்நிலையில், திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மக்கள் பயன்பெறும் வகையில், திருப்பூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், 90 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் சிகிச்சை மையம் கட்டும் பணி நடந்து வருகிறது.

'நமக்கு நாமே' திட்டத்தில் அரசின் நிதியுடன், திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில், பொதுமக்களின் பங்களிப்பு தொகை சேர்த்து, இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களின் பங்களிப்பு திரட்டி, புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு தேவையான உபகரணங்களை தருவிப்பது உள்ளிட்ட பணிகளை, திருப்பூரில் உள்ள ரோட்டரி சங்கத்தினர் கூட்டமைப்பு செய்து வருகிறது.

முதற்கட்டமாக, 5,000 சதுர அடியில், 'பங்கர்' எனப்படும் கட்டட கட்டுமானப்பணி நிறைவு பெற்றுள்ளது. இதில், புற்றுநோயின் தன்மையை கதிர்வீச்சு வாயிலாக அறிந்து கொள்ளும் வகையிலான உபகரணம், அமெரிக்காவில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு, 25.46 கோடி ரூபாய். அடுத்த கட்டமாக, நோயாளிகளின் வார்டு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்குரிய பிரிவுகள் அமைக்கும் பணி துவங்கவுள்ளது.

மொத்தம், 90 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ள இப்பணிக்கு, 30 கோடி ரூபாய் பொதுமக்கள் பங்களிப்பாக வழங்கப்பட வேண்டிய நிலையில், நிதி திரட்டும் பணியில் ரோட்டரி சங்க கூட்டமைப்பு வேகம் காட்டி வருகிறது. எஞ்சிய தொகையை அரசு வழங்கும்.

Advertisement