கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி விழா

அரியலுார்:கங்கைகொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திரசோழன் நினைவாக, ஆடித்திருவாதிரை விழா துவங்கியது.

மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு, அரியலுார் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் திருவாதிரை விழா நேற்று துவங்கியது.

விழாவுக்கு அரியலுார் கலெக்டர் ரத்தினசாமி தலைமை வகித்தார்.

அரசு விழா விழாவில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

கடந்த, 2021ம் ஆண்டு முதல் ஆடி திருவாதிரை விழா, அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

குடவாயில் பாலசுப்பிரமணியம் தான், நீண்ட ஆய்வுக்கு பின், திருவாரூர் கல்வெட்டை படித்துவிட்டு, மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தது மார்கழி திருவாதிரை அல்ல, அது ஆடி திருவாதிரை என்று சொன்னார்.

ஆடி திருவாதிரையில் பிறந்த நட்சத்திரத்தை வைத்து, இந்த நாளை கொண்டாட வேண்டும் என்ற, அந்த சரியான கால கணக்கீட்டை உருவாக்கித் தந்தார்.

எனவே, தமிழரின் வரலாற்று பெருமைகளை உருவாக்கக் கூடிய வகையில், இங்கே அகழாய்வுகளை நடத்த முதல்வர் உத்தரவிட்டார்.

நிதி ஒதுக்கீடு அகழாய்வு பணிகளில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த, 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சோழகங்கம் ஏரியினுடைய மேம்பாட்டுக்காக, 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

விழாவில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன், செய்தி, மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன், எம்.பி., திருமாவளவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பிரகதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.

Advertisement