ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைகிறது சபரிமலையில் கிரீன்பீல்டு விமான நிலையம் மத்திய அரசின் அனுமதிக்கு கேரள அரசு கடிதம்

கம்பம்:ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சபரிமலையில் அமையவுள்ள 'கிரீன் பீல்டு' சர்வதேச விமான நிலையம் அமைக்க (டி.பி.ஆர்.) விரிவான திட்ட அறிக்கையை கேரள அரசு, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச் சகத்திற்கு அனுப்பி உள்ளது.

சபரிமலை அருகே உள்ள எருமேலியில் கிரீன்பீல்டு சர்வதேச விமான நிலையம் அமைக்க மாநில அரசு 2017ல் அறிவிப்பு வெளியிட்டது. இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டால் ஏற்படும் சமூக பொருளதார பாதிப்பு குறித்தும், பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு குறித்தும் ஆராயப்பட்டது. தற்போது மாநில அரசு விரிவான அறிக்கையை மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைத்துள்ளது.

விமான நிலையம் 2408 ஏக்கர் பரப்பில் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது. விமான ஒடுதளம் மட்டும் 3500 மீட்டரில் அமைகிறது. விமான நிலையம் அமைக்க ரூ.5377 கோடியும், நில மதிப்பு மற்றும் பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ. 2408 கோடியும் சேர்ந்து மொத்தம் ரூ 7047 கோடியாகும்.

இந்த விமான நிலையம் அமைவதன் மூலம் கேரளாவின் 5வது சர்வதேச விமான நிலையமாக உருவெடுக்கும்.

எருமேலி விமான நிலையம், சபரிமலை பக்தர்களுக்கு பக்தர்கள் வெளிநாடுகளில் இருந்து கேரளா வரும் சுற்றுலா பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். விரைவில் விமான நிலைய கட்டுமான பணிகள் துவங்கும் என கேரள தொழில் மேம்பாட்டு கழகம் அறிவித்துள்ளது.

Advertisement