500 கிலோ மெட்ரோ ரயில் தளவாட இரும்பு பொருட்கள் மீட்பு: நால்வர் கைது

நந்தம்பாக்கம், மெட்ரோ ரயில் கட்டுமான பணிக்கான பொருட்களை திருடிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 500 கிலோ எடை கொண்ட இரும்பு பொருட்கள் மீட்கப்பட்டன.

சென்னை, பரங்கிமலை -பூந்தமல்லி சாலையில் மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. மெட்ரே ரயில் திட்டப் பணி பொருட்களை குடிமகன்கள் திருடிச் சென்று இரும்பு கடைகளில் சொற்ப விலைக்கு விற்பனை செய்து மது அருந்துவது வாடிக்கையான ஒன்றாகி வருகிறது.

சென்னை, நந்தம்பாக்கம் பகுதியில் நடந்து வரும் மெட்ரோ திட்டப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த, 500 கிலோ இரும்பு பொருட்கள் திருடு போனது.

இது குறித்து, ரயில்வே கட்டுமான பணிக்கான நிர்வாக அலுவலர் முகலிவாக்கத்தை சேர்ந்த திருமலைக்குமார், 31, என்பவர் நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நந்தம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, இரும்பு பொருட்கள் திருட்டு போன இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சிலர் திருடுவது பதிவாகி இருந்தது.

திருட்டில் ஈடுபட்டது திருவாரூரை சேர்ந்த முருகன், 56, பீஹார் மாநிலத்தை சேர்ந்த மனோஜ்குமார், 30, தர்மேந்திர பிரசாத், 43, மேற்குவங்க மாநிலம், கொல்கட்டாவை சேர்ந்த பரத்குமார் ராய், 37, ஆகியோர் என்பது தெரிந்தது. அவர்கள் கூறிய இடத்தில் இருந்து, 500 கிலோ மெட்ரோ தளவாட இரும்பு பொருட்களை மீட்டனர். போலீசார் நால்வரையும் கைது செய்தனர்.

Advertisement