பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம்; ஆதரவு குரல் கொடுக்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!

23


பாரிஸ்: பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதாக அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்தார். இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.


இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்தார்.

இது குறித்து, அவர் கூறியதாவது: மத்திய கிழக்கில் அமைதிக்கான வரலாற்று உறுதிப்பாட்டிற்கு இணங்க, பிரான்ஸ் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும். வரும் செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு முன் இந்த அறிவிப்பை வெளியிடுவேன்.



காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வந்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதே இன்றைய அவசர முன்னுரிமை. அமைதி சாத்தியம். உடனடி போர்நிறுத்தம் செய்து, அனைத்து பிணை கைதிகளையும் விடுவிக்க வேண்டும். காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவை.


பாலஸ்தீன அரசை வலுப்படுத்த வேண்டும். அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். வேறு வழியில்லை. பிரான்ஸ் மக்கள் மத்திய கிழக்கில் அமைதியை விரும்புகிறார்கள். நாம் அமைதியை அடைவோம். இவ்வாறு அவர் கூறினார்.


இதற்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்த முடிவை விமர்சித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: இது ஆபத்தானது மற்றும் தவறானது. பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிக்கிறது. பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுடன் இணைந்து அமைதியை நாடவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


அதேநேரத்தில் பாலஸ்தீனத் தலைவர்கள் பிரான்சின் ஆதரவை வரவேற்றனர். பாலஸ்தீனத்தை அங்கீகரித்த மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஐரோப்பிய நாடு பிரான்ஸ். 140 க்கும் மேற்பட்ட நாடுகள் இப்போது பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement