நல்லிணக்கம் ஏற்படுத்த முயற்சி: முஸ்லிம் மதகுருமார்களுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு

3


புதுடில்லி: கடந்த 2022ம் ஆண்டு துவங்கிய ஹிந்து அமைப்புகள் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் இடையிலான தொடர்ச்சியான உரையாடலின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட முக்கிய முஸ்லிம் மதகுருமார்கள் மற்றும் அறிஞர்களை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்தித்து பேசினார்.


டில்லியின் ஹரியானா பவனில் சுமார் 3.5 மணிநேரம் நடந்த இந்த சந்திப்புக்கு அகில இந்திய இமாம் அமைப்பு ஏற்பாடு செய்தது. அதன் தலைவர் இமாம் உமர் அகமது இலியாசி சந்திப்பை ஒருங்கிணைத்தார். இந்த சந்திப்பின் போது, ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக இரு மதத் தலைவர்களும் தொடர்ச்சியாக சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது.


இந்த சந்திப்பு தொடர்பாக வெளியான தகவலில் 'ஆர்எஸ்எஸ் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்த பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை தொடர்ந்து நடைபெறும் என மோகன் பகவத் உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது மோகன் பகவத்துடன் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலர் கிருஷ்ணா கோபால் , மூத்த நிர்வாகிகள் ராம்லால் மற்றும் இந்த்ரேஷ்குமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.


இது தொடர்பாக இலியாசி ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆர்எஸ்எஸ் அமைப்பு நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தையும், அகில இந்திய இமாம் அமைப்பு 50 ஆண்டு விழா கொண்டாடும் போது, இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பும் முயற்சி செய்தன. இதன் ஒரு பகுதியாக மோகன் பகவத் மதரஸா சென்றது முதல் நடவடிக்கை. இதனைத் தொடர்ந்து, இந்த சந்திப்பானது, பேச்சுவார்த்தையை இன்னும் அதிகப்படுத்துவதாக அமைந்தது.



கருத்து வேறுபாடு மற்றும் பிரிவினையை முடிவுக்கு கொண்டு வந்து நம்பிக்கையை வளர்க்கவும், பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் வழிவகுத்துள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்தும் விவாதித்தோம். இன்றைய உரையாடல் ஒரு நிரந்தர அம்சமாக இருக்கும். மதத்தலைவர்களின் வார்த்தைகளுக்கு மக்கள் கேட்பதால், கோவில்களில் அர்ச்சகர்கள் மற்றும் மசூதிகளில் இமாம்கள் மற்றும் குருகுலங்கள் மற்றும் மதரஸாக்களுக்கு இடையேயான தொடர்பை துவங்குவோம் என்று உறுதியளிக்கப்பட்டது. இது சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்க உதவும். மேலும், நாட்டின் நலனுக்காகவும் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


கடந்த 2022ம் ஆண்டும் இலியாசி அழைப்பின் பேரில், மோகன் பகவத், அகில இந்திய இமாம் அமைப்பு நிர்வகிக்கும் மதரஸாவுக்கும் மோகன் பகவத் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement