பயங்கரவாதிகளுக்கு வெடிமருந்து சப்ளை: வியாபாரிகளுக்கு போலீஸ் வலை!

5

சென்னை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில், பயங்கரவாதிகளுக்கு வெடி மருந்துகள் விற்ற வியாபாரிகளை, பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.



ஆந்திர மாநிலத்தில், 30 ஆண்டாக பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக், 59; முகமது அலி, 48 ஆகியோரை, இம்மாதம், 1ம் தேதி, தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர். இவர்களில், அபுபக்கர் சித்திக்கை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

போலீசாரிடம் அபுபக்கர் சித்திக் அளித்துள்ள வாக்குமூலம்: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் என் கூட்டாளிகள் உள்ளனர். அவர்கள் வெடிமருந்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தான் எங்களுக்கு வெடிமருந்து சப்ளை செய்து வருகின்றனர்.


நான் ஆந்திராவில் இருந்து, இரண்டு முறை தமிழகம் வந்து, இளையான்குடியில், 100 கிலோ வெடி மருந்துகளை வாங்கி சென்றுள்ளேன். கோவை மற்றும் திருப்பூருக்கும் சென்று, என் கூட்டாளிகளுக்கு வெடிகுண்டுகள் தயாரிப்பது தொடர்பாக பயிற்சி அளித்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



மேலும், இளையான்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், வெடி மருந்து விற்பனையில் ஈடுபட்டவர் விபரங்களை, அபுபக்கர் சித்திக் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படடையில், வெடி மருந்து வியாபாரிகளை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

மூவரிடம் விசாரணை



ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்தது தொடர்பாக, மூன்று பேரை காவலில் எடுத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து உள்ளனர். தமிழகத்தில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்தது தொடர்பாக, திண்டுக்கல் ராஜா அகமது, 45; பாலவாக்கம் ேஷக் தாவுது, 36; கோவை அபு ஹனிபா, 44 ஆகியோரை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.



இவர்களை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். விசாரணை நிறைவு பெற இன்னும் ஒரு நாள் இருக்கும் நிலையில், முன்னதாகவே நேற்று முன்தினம் சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் மீண்டும் அடைத்துள்ளனர்.


என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறுகையில், 'ராஜா அகமது உள்ளிட்ட மூவரும், தமிழகம் முழுதும் சென்று, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் இவர்களின் கூட்டாளிகளும் சிக்குவர்' என்றனர்.

Advertisement