ஓடும் கார் 'பானெட்' மீது நின்றபடி ஆட்டம்; மும்பை பெண்ணுக்கு போலீஸ் வலை

தானே: மஹாராஷ்டிராவின் நவிமும்பையில், ஓடும் காரின், 'பானெட்'டில் நின்று நடனமாடிய இளம்பெண் மற்றும் காரை ஓட்டிச்சென்ற இரு இளைஞர்கள் மீது வழக்கு பதிந்த போலீசார், அவர்களை தேடி வருகின்றனர்.
சமீபமாக இணையத்தில், 'ஆரா பார்மிங்' என்ற வார்த்தையும், அதுதொடர்பான நடனமும் கவனம் ஈர்த்து வருகிறது. வேகமாக நகரும் கார் மீது நின்று, அச்சமோ, பதற்றமோ இன்றி மென்மையான நடன அசைவுகளை வெளிப்படுத்துவதையே இணையவாசிகள், 'ஆரா பார்மிங்' என்று அழைக்கின்றனர்.
இந்த செயலை படம்பிடித்து, சமூக ஊடகங்களில் பதிவிடுவது உலகம் முழுதும், 'டிரெண்ட்' ஆகி வருகிறது. அந்த வகையில், நவிமும்பையின் கார்கர் பகுதியில் பரபரப்பான சாலையில், 'மெர்சிடிஸ் பென்ஸ்' காரில் இளம்பெண் ஒருவர், இந்த, 'ஆரா பார்மிங்' நடனத்தை ஆடியபடி சென்றார்.
ஓடும் காரின், 'பானெட்'டில் நின்றபடி சாவகாசமாக அவர் ஆடியதை சாலையில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர். பலர் இதை படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் புகார் அளித்தனர்.
இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் சம்பந்தப்பட்டவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமல்லாமல், பொதுமக்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போலீசார், காரை ஓட்டிய அல்பேஷ் அசாம் ஷேக், ரபீக் சுல்தே என்ற இரு இளைஞர்கள் மற்றும் நடனமாடிய பெண் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை தேடி வருகின்றனர்.




