ஓய்வுக்கு பின் எந்த அரசு பதவியும் ஏற்க மாட்டேன்; உறுதியுடன் சொல்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய்!

மும்பை: "ஓய்வுக்குப் பின் எந்த அரசு பதவியும் ஏற்க மாட்டேன்" என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான தாராபூரில், நடந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் பேசியதாவது: தனது சொந்த கிராமத்தில் தலைமை நீதிபதியாக அல்ல, சொந்த மாவட்டத்தில் வசிப்பவன் போல் இருக்கிறேன்.
ஓய்வுக்குப் பிறகு எனக்கு அதிக நேரம் கிடைக்கும், எனவே தாராபூர், அமராவதி மற்றும் நாக்பூரில் அதிக நேரம் செலவிட முயற்சிப்பேன். மக்களுக்கு எளிதில் நீதி கிடைக்க வேண்டும்.
நீதிபதி நியமனங்களை விரைவு படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்த முயற்சி செய்து வருகின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.
கேரளா மற்றும் பீஹார் கவர்னராக பணியாற்றிய தனது தந்தை ஆர்.எஸ். கவாயின் 10வது நினைவு தினத்தை யொட்டி, அவர் தனது சொந்த கிராமத்தில் ஒரு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது தான், வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெற உள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் ஓய்வுக்குப் பிறகு உள்ள திட்டங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.








