கேதார்நாத் யாத்திரையில் நிலச்சரிவில் சிக்கிய யாத்ரீகர்கள் 100 பேர்; பத்திரமாக மீட்டது மீட்புபடை

புதுடில்லி: கேதார்நாத் யாத்திரையின் போது நிலச்சரிவில் சிக்கி தவித்த யாத்ரீகர்கள் 100 பேரை பத்திரமாக மீட்ட மீட்பு படையினரை பல்வேறு தரப்பினர் வெகுவாக பாராட்டி உள்ளனர்.
கடந்த மே 2ம் தேதி முதல் கேதார்நாத் புனித யாத்திரை பயணம் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் புனித பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் யாத்ரீகர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பொதுப்பணி துறை அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் 24 மணி நேரமும் சிரமம் பார்க்காமல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த சூழலில், சோன்பிரயாக் அருகே ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், சோன்பிரயாக் பகுதியில் சிக்கி தவித்த யாத்ரீகர்கள் 100 பேரை பத்திரமாக மீட்பு படையினர் மீட்டனர். யாத்ரீகர்கள் 100 பேரும் நலமாக இருக்கின்றனர் என்பதை துணை கமிஷனர் ஆஷிஷ் திம்ரி உறுதி செய்தார்.
தக்க நேரத்தில், சாதுர்யமாக செயல்பட்ட மீட்பு படையினரை பல்வேறு தரப்பினர் வெகுவாக பாராட்டி வருகின்றனர். டேராடூன், சம்பாவத் மற்றும் நைனிடால் மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வானிலை மையம் எச்சரிக்கையை தொடர்ந்து, அரசாங்கமும், மாவட்ட நிர்வாகமும் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

