ஆந்திரா, தெலுங்கானாவில் கூடுதல் பாதை; தமிழகம் - டில்லி ரயில் பயண நேரம் குறையும்

சென்னை: 'ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில், கூடுதல் ரயில் பாதைகள் பயன்பாட்டிற்கு வரும் போது, தமிழகத்தில் இருந்து டில்லி செல்லும் விரைவு ரயில்களின் பயண நேரம், 20 நிமிடங்கள் குறையும்' என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து டில்லிக்கு, எட்டுக்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், சென்னையில் இருந்து டில்லிக்கு இயக்கப்படும் தமிழ்நாடு, ஜி.டி., துரந்தோ, ராஜ்தானி விரைவு ரயில்கள் மிகவும் பிரபலமானவை.
தமிழகத்தில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள், புதுடில்லியை இணைக்கும் வகையில், இரட்டை பாதைகள் உள்ளன. இருப்பினும், சில முக்கிய சந்திப்பு மற்றும் நகரங்களில், 4க்கும் மேற்பட்ட ரயில் பாதை இணைப்புகள் இருக்கின்றன.
எனவே, பயணியர் நெரிசல் மிக்க பகுதிகளில் தற்போது, 3வது மற்றும் 4வது ரயில் பாதை பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், ஆந்திர மாநிலம் விஜயவாடா, தெலுங்கானா மாநிலம் காஜிப்பேட்டை பகுதிகளில், மூன்றாவது ரயில் பாதை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
இதனால், தமிழகத்தில் இருந்து டில்லி செல்லும் விரைவு ரயில்களின் நேரம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
பயணியர் தேவை அதிகரித்து வரும் வழித்தடங்களில், கூடுதல் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் இருந்து டில்லியை இணைக்கும் வழித்தடம் முக்கியமானதாக இருக்கிறது. எனவே, இரண்டு பாதைகள் மட்டுமே உள்ள இடங்களில், மூன்றாவது ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலம் விஜயவாடா மற்றும் தெலுங்கானா மாநிலம் காஜிப்பேட்டையை இணைக்க, 219 கி.மீ., துாரத்திற்கு மூன்றாவது ரயில் பாதை பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இதில், 148 கி.மீ., துாரம் பணிகள் முடிந்துள்ளன. அடுத்த சில வாரங்களில், இது பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இதேபோல, எஞ்சியுள்ள பணிகள் முடிந்து, மூன்றாவது பாதை, அடுத்த ஐந்து மாதங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதனால், தமிழகத்தில் இருந்து டில்லி செல்லும் விரைவு ரயில்கள் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க முடியும். மேலும், தற்போதுள்ளதை காட்டிலும், 20 நிமிடங்கள் பயண நேரத்தை குறைக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


மேலும்
-
சிறப்பாக செயல்பட்ட எம்.பி.,க்கள் 17 பேருக்கு சன்சத் ரத்னா விருது; மத்திய அரசு அறிவிப்பு
-
அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்: தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது சுப்ரீம் கோர்ட்
-
சர்ச்சைகளால் தலைப்புச் செய்தியாகும் எம்.பி.,க்கள்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ வருத்தம்
-
நிலுவையில் ரூ.63,000 கோடி குடிநீர் வரி; திணறும் டில்லி அரசு
-
ஈரானில் நீதித்துறை கட்டடத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 8 பேர் உயிரிழப்பு
-
நாகப்பாம்பை கடித்து கொன்ற ஒரு வயது குழந்தை: பீஹாரில் சம்பவம்