மும்பையில் பெரும் விபத்து: கட்டுப்பாட்டை இழந்த டிரக் மோதி 20 வாகனங்கள் சேதம்

மும்பை: மும்பை - எக்ஸ்பிரஸ்வேயில் பிரேக் செயலிழந்தால், கட்டுப்பாட்டை இழந்த டிரக் அடுத்தடுத்து 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது. இதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து புனே வரையிலான எக்ஸ்பிரஸ்வேயில் , ராய்காட் மாவட்டத்தின் கோபோலி என்ற இடத்தில் டிரக் ஒன்று வந்து கொண்டு இருந்தது. திடீரென பிரேக் செயலிழந்ததால் டிரக் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த சொகுசு கார்கள் உள்ளிட்ட 20 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி பெரிய விபத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும், 19 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டிரக் டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரை மருத்துவ பரிசோதனையில், மது ஏதும் அருந்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
