உறங்கவிடாத லட்சியம் சாதித்துக்காட்டிய கலாம்

ஐ ந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார் கலாம். அவரது ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யர் பறவை எப்படிப் பறக்கிறது என்று பாடம் நடத்தினார்.

இதுதான், கலாமிற்கு தானும் பறக்க வேண்டும் என்ற லட்சிய விதை விதைக்கப்பட காரணமாக அமைந்தது. அந்த லட்சியம் அவரை உறங்கவும் விடவில்லை.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரியில் பி.எஸ்.சி., இயற்பியல் படித்தார். சென்னை எம்.ஐ.டி.,யில் ஏரோநாட்டிக்ஸ் படித்தார். படிப்பு முடித்ததும், அவருக்கு இருந்த ஒரே வேலை வாய்ப்பு பைலட் தான். பைலட் தேர்வுக்கு சென்ற போது, முதல் தோல்வி. எதிர்காலம் கேள்விக்குறியாக தோன்றியது. சிவானந்த ஆசிரமம் செல்கிறார். அவரது வாடிய முகம் கண்டு சிவானந்தர், 'உனக்கென்று ஏதோ ஒன்று விதிக்கப்பட்டுள்ளது. அதை கண்டுபிடித்து, அதை பற்றிச்செல். உன் லட்சியத்தை அடையலாம்' என்றார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறையில் அறிவியல் உதவியாளராக சேர்ந்தார். அந்த வேலையில் அவரது ஈடுபாட்டை பார்த்து, தரையில் இருந்து ஓர் அடி உயரத்தில் பறக்கும் இயந்திரத்தை வடிவமைக்கும் பணியை கொடுத்தனர். அதை வெற்றிகரமாக வடிவமைத்து, டாக்டர் எம்.ஜி.கே.மேனனை அதில் ஏற்றி சுற்றி காண்பித்தார் அப்துல்கலாம். இன்றைக்கு கடலோர பாதுகாப்பில் கோவர் கிராப்ட் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது என்றால், அந்த பறக்கும் இயந்திரத்தை வடிவமைக்க முதலில் வித்திட்டவர் கலாம். 10 வயது சிறுவனின் பறக்க வேண்டும் என்ற கனவு, பைலட்டாகி பறக்க முடியாதபோதும், பறக்கும் இயந்திரத்தை உருவாக்க காரணமானது.

Advertisement