மக்கள் மனங்களில் என்றும் வாழ்வார்

2015 ஜூலை 27.



மேகாலயாவின், ஷில்லாங்கிலுள்ள ஐ.ஐ.எம்., விழாவில் பேசிக்கொண்டிருந்தபோது மேடையிலேயே மயங்கிவிழுந்து அப்துல் கலாம் உயிர்நீத்தார். கலாம் மறைவு தேசம் முழுக்க எதிரொலித்தது. ஒரு மகத்தான மாமனிதரை தேசம் இழந்து விட்ட சோகம் அனைவர் மனதிலும் குடிகொண்டது.

ராமேஸ்வரம் மசூதி தெருவிலுள்ள கலாம் பிறந்த வீட்டின் முதல் மாடியில், 'மிஷன் ஆப் லைப் கேலரி' என்ற பெயரில், அப்துல் கலாம் பெற்ற விருதுகள், முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் எழுதிய நுால்கள் அனைத்தும் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில், பேக்கரும்பு என்ற இடத்தில் கலாம் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

மூன்றரை ஏக்கர் பரப்பளவில் 20 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த நினைவகம், குடியரசுத் தலைவர் மாளிகையை பிரதிபலிப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

'வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம்; அதை நழுவ விடாதீர்கள். வாழ்க்கை ஒரு கடமை; அதை நிறைவேற்றுங்கள். வாழ்க்கை ஒரு லட்சியம்; அதைச் சாதியுங்கள். வாழ்க்கை ஒரு சோகம்; அதைத் தாங்கிக் கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு போராட்டம்; வென்று காட்டுங்கள். வாழ்க்கை ஒரு பயணம்; அதை நடத்தி முடியுங்கள்'

பல்வேறு கூட்டங்களிலும் கலாம் கூறிவந்த வார்த்தைகள் இவை. வார்த்தைகளை வெறும் சொல்லாடலுக்காக அன்றி தானே முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர் அவர்.

குழந்தைகள் உள்ளங்களில், இளைஞர்கள் எண்ணங்களில், மக்களின் மனங்களில் என்றென்றும் வாழ்வார்; காலமும் அவரைக் கொண்டாடிக்கொண்டே இருக்கும்!

Advertisement