கழிப்பறை கட்டித் தாருங்கள் அமைச்சரிடம் முறையீடு

சிங்கம்புணரி: சிங்கம்புணரி வந்த அமைச்சர் பெரிய கருப்பனிடம் தங்கள் பகுதிக்கு கழிப்பறை கட்டித்தர பெண்கள் முறையிட்டனர்.

இப்பேரூராட்சியில் 2வது வார்டுக்குட்பட்ட செல்வவிநாயகர் கோவில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களது வீடுகளில் தனிநபர் கழிப்பறை இல்லை, கட்டுவதற்கான இட வசதியும் இல்லை.

அருகில் பொது சுகாதார வளாகம் எதுவும் இல்லாததால் குடியிருப்பை ஒட்டிய காட்டுப்பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர். தற்போது காட்டுப்பகுதியில் பிளாட் போடப்பட்ட நிலையில் இப்பகுதி பெண்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். நேற்று சிங்கம்புணரி அரசு மருத்துவமனை வந்த அமைச்சர் பெரியகருப்பனிடம், கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைப்பதாகவும், தங்களுக்கு கழிப்பறை குளியலறை கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்து நடவடிக்கை எடுக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

Advertisement