விமானத்தில் பயணிகள் போராட்டம்; கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட பெண் ஊழியர்

2


மும்பை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்பட தாமதமானதால் விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், செய்வதறியாது திகைத்துப் போன பெண் ஊழியர்கள், கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மும்பையில் இருந்து வாரணாசிக்கு செல்லும் இண்டிகோ விமானம் நேற்றிரவு 7.45 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 2 மணிநேரம் தாமதமானது. இதனால், விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகள் கோபத்தில் கத்தி கூச்சலிட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த விமானப் பெண் பணியாளர்கள், அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர்.


இந்த நிலையில், விமானப் பயணிகள், பெண் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், "ஏன் இன்னும் விமானம் புறப்படவில்லை. எங்கள் உயிருக்கு மதிப்பில்லையா?" என்று எல்லாம் கேள்வி எழுப்புகின்றனர். மற்றும் சிலரோ, "எங்களை முதலில் விமானத்தில் ஏற்றிவிட்டு பிறகு சோதனைகள் செய்கிறீர்களா? வானில் ஏதாவது நடந்தால், அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்?," என்று கேட்டனர்.


அதற்கு, விமானத்தில் வீடியோ எடுக்க அனுமதி இல்லை என்று கூறும் பணிப்பெண், விமானம் தாமதமாக புறப்படுவதற்கு, பயணிகளை நோக்கி கையெடுத்து கும்பிட்டவாறு மன்னிப்பு கேட்டார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரவு 9.45க்கு வாரணாசி வந்து சேர வேண்டிய விமானம், இறுதியில், இரவு 11.40 மணிக்கு தான் வந்து சேர்ந்துள்ளது.

Advertisement