உலக விளையாட்டு செய்திகள்

ரடுகானு தோல்வி

அமெரிக்காவில் நடக்கும் வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானு 4-6, 3-6 என்ற கணக்கில் ரஷ்யாவின் அனா கலின்ஸ்கயாவிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

இன்டர் மயாமி 'டிரா'

இன்டர் மயாமி, சின்சினாட்டி அணிகள் மோதிய மேஜர் லீக் கால்பந்து போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. இப்போட்டியில் மயாமி அணியின் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்சி, தடை காரணமாக பங்கேற்கவில்லை.

அமெரிக்கா அபாரம்

உஸ்பெகிஸ்தானில் நடக்கும் ஆண்களுக்கான (19 வயது) உலக வாலிபால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் அமெரிக்க அணி 3-2 என கொலம்பியாவை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் பின்லாந்து அணி 3-0 என, கியூபாவை வென்றது.

மெக்சிகோ கலக்கல்

உருகுவேயில் நடக்கும் பெண்களுக்கான பான் அமெரிக்கன் கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் மெக்சிகோ, டிரினிடாட் அண்ட் டொபாகோ அணிகள் மோதின. இதில் மெக்சிகோ அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.



எக்ஸ்டிராஸ்

* துலீப் டிராபி கிரிக்கெட் தொடருக்கான தெற்கு மண்டல அணியின் கேப்டனாக திலக் வர்மா, துணை கேப்டனாக முகமது அசாருதீன் அறிவிக்கப்பட்டனர். இந்த அணியில் தேவ்தத் படிக்கல், நாராயணன் ஜெகதீசன், சாய் கிஷோர் இடம் பெற்றுள்ளனர்.

* சவுதி அரேபியாவில் நடக்கும் 'இஸ்போர்ட்ஸ்' உலக கோப்பை பைனல், செஸ் போட்டிக்கு இந்தியாவின் நிஹால் சரின், அர்ஜுன் எரிகைசி தகுதி பெற்றனர். தமிழக வீரர் பிரக்ஞானந்தா தகுதி பெறத்தவறினார்.

* அசாமில் நடந்த துாரந்த் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் இந்தோ திபெத்திய எல்லை காவல்படை அணி 2-1 என்ற கோல் கணக்கில் அசாமின் மார்னிங் ஸ்டார் அணியை வீழ்த்தியது.


* லீட்சில் நடந்த 'வேர்ல்டு சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ்' தொடருக்கான ('டி-20') லீக் போட்டியில் இந்திய அணி (203/4), 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் (207/6) தோல்வியடைந்தது. ஷிகர் தவான் (91*), யூசுப் பதான் (52) அரைசதம் வீணானது.

Advertisement