ஊட்டி அருகே முழு கொள்ளளவை எட்டிய அவலாஞ்சி அணை திறப்பு

ஊட்டி; ஊட்டி அருகே அவலாஞ்சி அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக அவலாஞ்சி, 26 செ.மீ., அப்பர் பவானியில், 18 செ.மீ., மழை பதிவாகியது.

அவலாஞ்சி அணையின் உயரமான, 171 அடிவரை தண்ணீர் நிரம்பியது. அணைக்கு, வினாடிக்கு, 1000 கன அடி வீதம் தண்ணீர் வரத்து உள்ளது. அணை பாதுகாப்பு கருதி காலை, 9:00 மணி முதல் இரண்டு மதகுகளில் வினாடிக்கு தலா, 500 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. மேலும், எந்த நேரத்திலும் குந்தா அணை திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளது. இதன் காரணமாக, உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் ஒலி பெருக்கி வாயிலாக, 'கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். கரையோரங்களில் விவசாய நிலங்களில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்,' என, அறிவுறுத்தி வருகின்றனர்.

Advertisement