சோழ பேரரசர்களான ராஜராஜனும், ராஜேந்திரனும்... பாரதத்தின் அடையாளம்! ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி புகழாரம் இருவருக்கும் பிரமாண்ட சிலை நிறுவப்படும் என பேச்சு

சென்னை:''சோழ பேரரசர்களான ராஜராஜனும், ராஜேந்திரனும், நம் பாரதத்தின் அடையாளம். தமிழகத்தில், அவர்கள் இருவருக்கும் பிரமாண்டமான சிலை நிறுவப்படும்,'' என, கங்கை கொண்ட சோழபுரத்தில் நேற்று நடந்த ஆடி திருவாதிரை நிறைவு விழாவில், பிரதமர் மோடி தெரிவித்தார்.
அரியலுார் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் ஆடி திருவாதிரை விழா, முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் கோவில் கட்டத் துவங்கிய 1,000மாவது ஆண்டு விழா, தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மீது, ராஜேந்திர சோழன் படையெடுத்து சென்ற 1,000மாவது ஆண்டு நிறைவு என, முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

இதன் நிறைவு விழாவில், பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:
சரித்திரப்பூர்வமான கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில், 140 கோடி மக்கள் நலனுக்காக, பாரதத்தின் நிரந்தர வளர்ச்சிக்காக வேண்டுதலை முன் வைத்தேன்.
சிவனின் நல்லாசிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். சோழ அரசர்கள், தங்கள் அரசியல் மற்றும் வணிகத் தொடர்புகள் விரிவாக்கத்திற்காக, இலங்கை, மாலத்தீவு மற்றும் தெற்காசிய நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
அமரத்துவம்
மாலத்தீவில் இருந்து நேற்று முன்தினம் திரும்பினேன். நேராக தமிழகம் வந்து நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சிவனை வழிபாடு செய்வோர், சிவபெரு மானிடம் கலந்து விடுவர்.
அவரை போலவே அழிவற்றவராகி விடுவர் என நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே, சிவன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்த சோழர்களின் பாரம்பரியமும் அமரத்துவம் பெற்றுள்ளது.
சோழ மன்னர்களான ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் பாரதத்தின் அடையாளங்கள். இன்று வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி முன்னேற்றம் கண்டு வருகிறோம்.
சோழ சாம்ராஜ்ய காலகட்டம், பாரதத்தின் பொற்காலமாக இருந்தது என, வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த காலத்தில், அவர்களின் போர்த் திறன் வலிமை மிகுந்ததாக இருந்தது.
ஜனநாயகத்தின் தாய் என்ற முறையில், பாரதத்தின் பாரம்பரியத்தை, சோழ சாம்ராஜ்யம் முன்னெடுத்து சென்றுள்ளது. மக்களாட்சி என்று சொன்னால், பிரிட்டன் குறித்து சிலர் பேச துவங்குவர்.
ஆனால், பல நுாற்றாண்டுகளுக்கு முன்னரே, சோழர்கள் ஆட்சியில் குடவோலை முறையில், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தது.
உலகெங்கிலும் நீர் மேலாண்மை, சூழலியல் பாதுகாப்பு குறித்து, தற்போது விவாதங்கள் நடக்கின்றன. நம் முன்னோர் மிகப் பழமையான காலத்தில், இவற்றின் மகத்துவத்தை நன்கு அறிந்து வைத்திருந்தனர்.
மற்ற இடங்களில் இருந்து, தங்கம், வெள்ளி, கால்நடைகளை கவர்ந்து வந்த மன்னர்கள் குறித்து கேள்விப் பட்டிருக்கிறோம்.
ஆனால், ராஜேந்திர சோழன் அடையாளம், புனித கங்கை நீரை கொண்டு வந்தது. ராஜேந்திர சோழன் புனித கங்கை நீரை கொண்டு வந்து, சோழகங்கை ஏரியில் நிரப்பினான்.
ஆனந்த தாண்டவம்
கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை கட்டினான். இக்கோவில் இன்றும் உலக அளவில் கட்டடவியல் அற்புதமாக உள்ளது.
காவிரி பெருகி பாயும் இந்த பூமியில், கங்கைக்கு திருவிழா எடுக்கப்படுவது, சோழ சாம்ராஜ்யத்தின் நற்கொடையாகும்.
கங்கை நீரை காசியில் இருந்து கொண்டு வந்திருப்பது, எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் கங்கை மக்களின் பிரதிநிதி.
சோழ அரசர் களின் செயல், அதோடு இணைந்த இந்த ஏற்பாடு, 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற பெரும் வேள்வியை போன்றது. சோழ அரசர்கள், பாரதத்தை, கலாசார ஒற்றுமை என்ற இழை கொண்டு இணைத்தனர். நம் அரசு அதே எண்ணத்தை முன்னெடுத்து செல்கிறது.
தமிழ் கலாசாரத்தோடு இணைந்த புனிதமான செங்கோல் பார்லிமென்டில் நிறுவப்பட்டுள்ளது. அதை இன்று நினைத்து பார்த்தாலும், என் நெஞ்சம் பெருமிதத்தில் பொங்குகிறது. இங்கு சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை சந்தித்தேன். அந்த கோவில் பிரசாதத்தை வழங்கினர். நடராஜரின் சொரூபம், நமது தத்துவம், அறிவியல் வேர்களின் அடையாளம். நடராஜரின் ஆனந்த தாண்டவம், டில்லி பாரத் மண்டபத்தில் அழகு சேர்க்கிறது.
நம் சைவ பாரம்பரியம், பாரதத்தின் கலாசார நிர்மாணத்தில், மிகப்பெரிய பங்களிப்பை தந்துள்ளது. சோழப் பேரரசர்கள் இதில் பெரும் பங்காற்றினர். அதனால், இன்றும் சைவ பாரம்பரியம் நிர்மாணத்தில், தமிழகம் முக்கியமானதாக உள்ளது. பெருமைமிகு நாயன்மார்களின் சீர்மரபு, அவர்கள் இயற்றிய பக்தி காப்பியங்கள், தமிழ் இலக்கியம், ஆதினங்களின் பங்களிப்பு, அவர்களின் சமூகப் பணிகள் போன்றவை, புதிய யுகத்திற்கு வழிவகுத்துள்ளன.
இன்று உலகம் நிலையில்லா தன்மை, வன்முறை, சுற்றுச்சூழல் பிரச்னைகளில் உழன்று வருகிறது. அதற்கு தீர்வளிக்கும் பாதையை, சைவ சித்தாந்தம் காட்டுகிறது.
'அன்பே சிவம்' என்றார் சித்தர் திருமூலர். இந்த கோட்பாட்டை உலகம் முழுதும் கடைப்பிடித்தால் பெரும்பான்மையான சங்கடங்கள் தாமாகவே தீர்ந்து விடும். இந்த எண்ணத்தையே, 'ஓர் உலகம், ஓர் குடும்பம், ஓர் எதிர்காலம்' என்ற அடிப்படையில், பாரதம் முன்னெடுத்து செல்கிறது. இன்றைய பாரதம், தனது வரலாற்றின் மீது பெருமிதம் கொண்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், நாட்டின் பாரம்பரியத்தை போற்றி பாதுகாக்க பணியாற்றி வருகிறோம்.













கலைச்சின்னங்கள் மீட்பு
நம் நாட்டின் கலைச்சின்னங்கள் களவாடப்பட்டு, அயல்நாடுகளில் விற்கப்பட்டன. அதை மீட்டெடுத்து வந்துள்ளோம். 2014ம் ஆண்டுக்கு பிறகு, 600க்கும் அதிகமான கலை படைப்புகள், பல்வேறு நாடுகளில் இருந்து, பாரதம் கொண்டு வரப்பட்டன. இவற்றில், 36 கலைப் பொருட்கள், தமிழகத்தை சேர்ந்தவை. நடராஜர், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், சண்டிகேஸ்வரர், பார்வதி, சம்பந்தர் மீண்டும் இப்பூமியில் அழகு சேர்த்து வருகின்றனர்.
நமது மரபும், சைவ தத்துவத்தின் முத்திரையும், பாரதம் மட்டுமின்றி, இந்த பூமியோடும் நின்றுவிடவில்லை. பாரதம் நிலவின் தென்துருவத்தில் இறங்கியது. அந்த இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் சூட்டினோம். அந்த பகுதி, இனி சிவசக்தி என்ற பெயரால் அடையாளம் காணப்படும்.
ராஜராஜ சோழன் சக்திவாய்ந்த கடற்படையை உருவாக்கினார். ராஜேந்திர சோழன் அதை பலப்படுத்தினார். அவர் காலத்தில் பல்வேறு நிர்வாக மேம்பாடுகள் நடந்தன. உள்ளூர் நிர்வாக அமைப்பை சக்தி உடையதாக்கினார். பலமான நிதி வழிமுறையை உருவாக்கினார். வியாபாரம், கலை, கலாசாரம் என, பாரதம் அனைத்து திசையிலும், நிறைவாக முன்னேறியது.
சோழ சாம்ராஜ்யம் புதிய பாரதத்தின், பழமையான வழிகாட்டியாக உள்ளது. நம் நாடு முன்னேற்றம் அடைய, நாம் ஒற்றுமையின் மீது அழுத்தம் தர வேண்டும். நம் கடற்படையை, பாதுகாப்பு படைகளை பலமுள்ளதாக்க வேண்டும். புதிய சந்தர்ப்பங்களை தேடிக் கொண்டே இருக்க வேண்டும். நமது விழுமியங்களை பாதுகாக்க வேண்டும்.
இன்றைய பாரதம், தனது பாதுகாப்பை பெரிதாகக் கருதுகிறது. யாராவது பாரதத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீது தாக்குதல் நடத்தினால், பாரதம் எப்படி பதில் கொடுக்கும் என்பதை, 'ஆப்பரேஷன் சிந்துாரின்' போது உலகமே உற்றுப் பார்த்தது. பாரதத்தின் எதிரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும், எந்த மறைவிடமும் பாதுகாப்பானது கிடையாது என்பதை, 'ஆப்பரேஷன் சிந்துார்' வெளிச்சம் போட்டு காட்டியது.
இங்கு வந்த போது, 3 கி.மீ., தொலைவில், ஹெலிபேடு இருந்தது. ரோடு ேஷாவில் பங்கேற்றவர்கள் வாயில், 'ஆப்பரேஷன் சிந்துார்' மந்திர ஒலியாக ஒலித்தது. இது நாடு முழுதும் உள்ள மக்கள் குரலில் ஒலிக்கிறது. நம் நாடு மட்டுமல்ல, உலகமே இதை வியந்து பார்க்கிறது. இந்தியாவின் வல்லமையை உலகம் தெரிந்து கொண்டது.
முன்னேறுகிறது
ராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மாணித்தாலும், அதன் கோபுரத்தை தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் கோபுரத்தை விட குறைவாக வைத்தார். தனது தந்தை கட்டிய கோவில் கோபுரத்தின் உயரத்தை தக்க வைக்க விரும்பினார். தனது மகத்துவத்திற்கும் இடையிலும், ராஜேந்திர சோழன் மிகுந்த பணிவை வெளிப்படுத்தினார்.
இன்றைய புதிய பாரதம், அதே பாதையில் முன்னேறுகிறது. நாம் பலமடைந்து வருகிறோம். எனினும், நம் உணர்வுகள், உலகத்தின் நண்பனுக்கானவை. உலக நலனுக்கானவை. நம் பாரம்பரியத்தின் மீது, பெருமித உணர்வை முன்னெடுக்கும் நிலையில், மேலும் ஒரு உறுதிப்பாட்டை மேற்கொள்கிறேன். வரும் காலத்தில், தமிழகத்தில் ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் இருவருக்கும் பிரமாண்டமான உருவச்சிலையை நிர்மாணம் செய்வோம். இந்த உருவ சிலைகள், நம் வரலாற்று விழிப்புணர்வின் நவீன கொடி மரங்களாகும்.
இன்று அப்துல்கலாம் நினைவு தினம். வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு தலைமை தாங்க, கலாம், சோழப் பேரரசர்களை போன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் தேவை. சக்தியும், பக்தியும் நிறைந்த இளைஞர்கள், நம் மக்களின் கனவை நிறைவேற்றுவர். நாம் இணைந்து, 'ஒரே பாரதம்' என்ற உண்வை முன்னெடுத்து செல்வோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
@block_Y@ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் வெளியீடு
*கங்கை கொண்ட சோழபுரம் வந்த பிரதமர் மோடியை, கவர்னர் ரவி, மத்திய அமைச்சர் முருகன், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., தாமரை ராஜேந்திரன் ஆகியோர் வரவேற்றனர்
*பிரதமர் வந்த ஹெலிகாப்டர், கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கோபுரத்தை சுற்றி வந்தது. அதிலிருந்தபடியே கோவில் கோபுர அழகை பிரதமர் கண்டு ரசித்தார்
* ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய பிரதமர், காரில் 2 கி.மீ., துாரம் பயணம் செய்து, கோவிலுக்கு சென்றார். வழிநெடுகிலும் மக்கள் இருபுறமும் திரண்டு நின்று வரவேற்றனர். அவர் மீது மலர் துாவினர். மக்களின் உற்சாக கூக்குரலை கண்ட மோடி, காரின் கதவை திறந்தபடி நின்று மக்களை நோக்கி கை அசைத்தார்
* மாணவ, மாணவியர் தங்கள் முகத்தில், மோடி முக கவசத்தை அணிந்தபடி நின்றனர். சிவ வாத்தியங்கள், செண்டை மேளங்கள் முழங்க, பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது
*கோவிலில் பிரதமருக்கு ஓதுவாரின் சிறப்பு பாராயணத்துடன், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது *கோவில் மூலவரை, தீபாராதனை காட்டி பிரதமர் வழிபட்டார். கோவிலில் இந்திய கலாசார மையம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த, புகைப்பட கண்காட்சியை கண்டுகளித்தார்
*பிரதமருக்கு தென்னக பண்பாட்டு மையம் சார்பில், கவர்னர் ரவி, கங்கைகொண்ட சோழபுரம் கோவில் தஞ்சாவூர் ஓவியத்தை நினைவுப் பரிசாக அளித்தார். தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு சால்வை அணிவித்து, வீணை ஓவியத்தை நினைவுப் பரிசாக வழங்கினார் *விழாவில் ஓதுவார்களின் இசைப்பாராயணம், இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்தது
* அதைத் தொடர்ந்து, முதலாம் ராஜேந்திரனின் வெற்றிப்பயணம் நினைவாக, அவர் உருவம் பொறித்த நாணயத்தை பிரதமர் வெளியிட்டார்
*பிரதமர் தன் பேச்சை துவக்கும் போது, 'வணக்கம் சோழ மண்டலம்' என்று தமிழில் கூறினார். அதைத்தொடர்ந்து திருவாசகத்தின் சில வரிகளை தமிழில் கூறினார். தன் பேச்சின் போது, 'இளையராஜாவின் இசை பரவசம் ஏற்ப டுத்தியது' என்றார்
* பிரதமருக்கான வரவேற்பு நிகழ்ச்சியில், அ.தி.மு.க.,வினர் தங்கள் கட்சி கொடியுடன் பங்கேற்றனர்
* பிரதமர் மோடி, இளையராஜாவின், 'பகவத் கீதை' ஆல்பத்தை வெளியிட்டார். தொடர்ந்து, இளையராஜாவின், 'ஹர ஹர மகாதேவ்; நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க' போன்ற பாடல்களின் பக்தி நாதம் முழங்கியது. இந்த இசை நிகழ்ச்சியை தாளமிட்டு ரசித்த பிரதமர் மோடி, நிகழ்ச்சியின் முடிவில் எழுந்து கைதட்டி பாராட்டினார்
*விழாவில், தமிழக கவர்னர் ரவி, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், சிதம்பரம் எம்.பி., திருமாவளவன், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த நிர்வாகிகள் பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை, 36 ஆதீனங்கள், 40 ஓதுவார்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.block_Y