பெண்களுக்கான நிதியுதவி திட்டத்தில் பலனடைந்த 14 ஆயிரம் ஆண்கள் மஹாராஷ்டிராவில் புது மோசடி

3


மும்பை: மஹாராஷ்டிராவில் பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 14 ஆயிரம் ஆண்களும் பெற்றது தெரியவந்துள்ளது.


மஹாராஷ்டிராவில், பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ள பெண்களுக்காக மாதம் ரூ.1,500 நிதியுதவி வழங்கும் ' லடிகி பஹின் யோஜனா ' என்ற திட்டத்தை அம்மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. 2024 சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.


இந்நிலையில் இந்தத் திட்டம் குறித்து மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் துறை ஆய்வு செய்தது. அதில் 14,298 ஆண்கள் இந்த உதவித்தொகையை பெற்றுள்ளனர். அவர்கள் முறைகேடாக பெண்களை போல் பதிவு செய்து கடந்த 10 மாதமாக மொத்தம் ரூ.21.4 கோடி நிதியை பெற்று வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடக்கிறது.


இது குறித்து துணை முதல்வர் அஜித் பவார் கூறியதாவது: பெண்கள் நலனுக்காக இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆண்கள் ஏன் இந்த திட்டத்தில் பணத்தை பெற்றுள்ளனர் என தெரியவில்லை. அவர்களிடம் இருந்து பணம் திரும்பப் பெறப்படும். இல்லை என்றால், அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் அறிக்கையில், தகுதியில்லாத பெண்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டதால் முதல் ஆண்டில் மாநில அரசுக்கு ரூ.1,600 கோடி இழப்பு ஏற்பட்டது. மேலும் ஒரு குடும்பத்தில் இரண்டு பேருக்கு மேல் நிதி பெற முடியாது என்ற விதி உள்ளது. ஆனால், 7.97 லட்சம் பெண்கள் மோசடியாக தங்களது குடும்பத்தில் 3வதாக ஒரு பெண்ணை சேர்த்து அவர்களுக்கும் பணம் வாங்கி வந்துள்ளனர். இதனால் ரூ.1,196 கோடி இழப்பு ஏற்பட்டது.


இந்த நிதியுதவியை 65 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மட்டுமே பெறலாம் என்ற விதியை மீறி, அந்த வயதையும் தாண்டி 2.87 லட்சம் பெண்கள் இந்த நிதியை பெற்றதால் ரூ.431.7 கோடி இழப்பு ஏற்பட்டது. கார் வைத்துள்ள 1.67 லட்சம் பெண்களும் இந்தத் திட்டத்தில் பலன்பெற்றுள்ளதும் தெரியவந்தது.

Advertisement