குண்டும் குழியுமான சாலைகள் வாகன ஓட்டிகள் அவதி

வானுார்: கோட்டக்கரையில் இருந்து ஆரோவில் செல்லும் பிரதான சாலை குண்டும், குழியுமாக படுமோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வானுார் அடுத்த இரும்பை ஊராட்சிக்குட்பட்ட, கோட்டக்கரை பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இது மட்டுமின்றி இந்த பகுதி வழியாக ஆரோவில்லுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த கோட்டக்கரை-ஆரோவில் செல்லும் பிரதான சாலை பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. தற்போது இந்த சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து படுமோசமாக உள்ளது.
ஒரு சில இடங்களில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சாலை வழியாக ஆரோவில் பகுதிக்கு உள்ளூர் வாசிகள் மட்டுமின்றி, வெளி மாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
சாலை படுமோசமாக உள்ளதாகவும், அதை சீரமைத்து தரக்கோரியும், அப்பகுதி மக்கள், பி.டி.ஓ., அலுவலகத்தில் பல முறை புகார் அளித்தனர். இதன் காரணமாக அதிகாரிகளும், கோட்டக்கரை சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தர, மாவட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர். ஆனால் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இந்த சாலையை புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.