சுப்மன், ஜடேஜா, வாஷிங்டன் சதம்: 'டிரா' செய்து இந்தியா அசத்தல்

மான்செஸ்டர்: மான்செஸ்டர் டெஸ்டில் துணிச்சலாக போராடிய இந்திய அணி, 'டிரா' செய்து அசத்தியது. கேப்டன் சுப்மன் கில், வாஷிங்டன், ஜடேஜா என மூவர் சதம் அடித்து கைகொடுத்தனர். இங்கிலாந்து பவுலர்கள் ஏமாற்றம் அளித்தனர்.
நான்காவது டெஸ்ட், மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 358 ரன் எடுத்தது. இங்கிலாந்து 669 ரன் குவித்து, 311 ரன் முன்னிலை பெற்றது. நான்காவது நாள் ஆட்ட முடிவில், இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 174/2 ரன் எடுத்து, 137 ரன் பின்தங்கி இருந்தது.
சுப்மன் 103 ரன்: ஐந்தாவது நாள் ஆட்டத்தில் ஸ்டோக்ஸ் பந்தில் ராகுல் (90) அவுட்டானார். கேப்டன் இன்னிங்ஸ் விளையாடிய சுப்மன், டெஸ்ட் அரங்கில் 9வது சதம் எட்டினார். சிறிது நேரத்தில் ஆர்ச்சர் 'வேகத்தில்' சுப்மன் (103, 12x4) அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். அடுத்த பந்து, ஜடேஜா பேட்டில் பட்டு ஜோ ரூட் தலைக்கு மேல் சென்றது. இதை பிடிக்க இரு முறை முயற்சித்தார். இறுதியில் ரூட் கைநழுவ, ஜடேஜா தப்பினார். உணவு இடைவேளையின் போது இந்தியா 223/4 ரன் எடுத்து, 88 ரன் பின்தங்கியிருந்தது.
வாஷிங்டன் முதல் சதம்: பின் வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா சேர்ந்து இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். இங்கிலாந்து 'ஸ்பின்னர்' டாசன் உள்ளிட்டோர் பந்துவீச்சு எடுபடவில்லை. புரூக் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஜடேஜா, டெஸ்டில் 5வது சதம் அடித்தார். இதே போல புரூக் பந்தில் 2 ரன் எடுத்த தமிழகத்தின் வாஷிங்டன், டெஸ்டில் முதல் சதம் எட்டினார். இருவரும் சதம் எட்டிய நிலையில், போட்டியை 'டிரா' செய்ய இரு அணிகளும் ஒப்புக் கொண்டன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 425/4 ரன் எடுத்தது. ஜடேஜா (107), வாஷிங்டன் (101) அவுட்டாகாமல் இருந்தனர்.
தற்போது 'ஆண்டர்சன்-சச்சின் டிராபி' தொடரில், இங்கிலாந்து அணி, 2--1 என முன்னிலையில் உள்ளது. ஐந்தாவது டெஸ்ட் வரும் 31ல் ஓவலில் துவங்குகிறது.
700 ரன்
ஒரு டெஸ்ட் தொடரில் 700 ரன் மேல் எடுத்த மூன்றாவது இந்திய வீரரானார் சுப்மன் கில் (4 போட்டி, 722 ரன்). முதல் இரு இடத்தில் கவாஸ்கர் (774, எதிர், வெ.இ., 1971), கவாஸ்கர் (732, எதிர், வெ.இ., 1978-79), ஜெய்ஸ்வால் (712, எதிர், இங்கி., 2024) உள்ளனர்.
* ஒரு டெஸ்ட் தொடரில் 700 ரன்னுக்கு மேல் எடுத்த கேப்டன் பட்டியலில் இடம் பெற்றார் சுப்மன் கில். இதற்கு முன் பிராட்மேன் (இரு முறை), சோபர்ஸ், கவாஸ்கர், கோவர், கூச், கிரேம் ஸ்மித் இப்படி அசத்தினர்.
417 பந்தில் 188 ரன்
இங்கிலாந்து மண்ணில் அதிக பந்துகளை சந்தித்த இந்திய ஜோடி என சுப்மன்-ராகுல் சாதனை படைத்தனர். 3வது விக்கெட்டுக்கு 417 பந்தில் 188 ரன் சேர்த்தனர். இதற்கு முன் ஹெடிங்லி டெஸ்டில் (2002) டிராவிட்-சஞ்சய் பங்கர் (170 ரன், 405 பந்து), சச்சின்-கங்குலி (249 ரன், 357 பந்து) அசத்தினர்.
முதல் கேப்டன்
கேப்டனாக அறிமுகமான டெஸ்ட் தொடரில் (எதிர், இங்கி.,) நான்கு சதம் அடித்த உலகின் முதல் வீரரானார் சுப்மன் கில். இதற்கு முன் இந்தியா சார்பில் அறிமுக கேப்டனாக கோலி 3 சதம் (2014-15, எதிர், ஆஸி., ) அடித்திருந்தார்.
* ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதம் அடித்த 3வது கேப்டன் ஆனார் சுப்மன் (4). இதற்கு முன் ஆஸ்திலேியாவின் பிராட்மேன் (எதிர், இந்தியா, 1947-48), இந்தியாவின் கவாஸ்கர் (எதிர், வெ.இ., 1978-79) 4 சதம் அடித்தனர்.
* ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா சார்பில் அதிக சதம் அடித்த 3வது வீரர் சுப்மன் (4). இதற்கு முன் இரு முறை கவாஸ்கர் (எதிர், வெ.இ., 1971, 1978-79), கோலி (எதிர், ஆஸி., 2014-15) 4 சதம் அடித்தனர்.
அறிமுகம் அமோகம்
கேப்டனாக அறிமுக டெஸ்ட் தொடரில் அதிக ரன் எடுத்தவர்களில் சுப்மன் கில் (722 ரன், எதிர், இங்கி., 2025) இரண்டாவது இடம் பெற்றார். முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் (810 ரன், எதிர் இங்கி., 1936-37) உள்ளார்.
* இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் தொடரில் 700 ரன்னுக்கு மேல் எடுத்த முதல் ஆசிய வீரர் சுப்மன்.
ஜடேஜா 1000 ரன், 30 விக்.,
அன்னிய மண்ணில் 1000 ரன், 30 விக்கெட் வீழ்த்திய 3வது வீரரானார் ரவிந்திர ஜடேஜா (எதிர், இங்கி.). முதல் இரு இடங்களில் வில்பிரட் ரோட்ஸ் (இங்கி., எதிர் ஆஸி. 1032 ரன், 42 விக்.,), சோபர்ஸ் (வெ.இ., எதிர், இங்கி., 1820 ரன், 62 விக்.,) உள்ளனர்.
* இங்கிலாந்து மண்ணில் 1000 ரன் எடுத்த 7வது இந்திய வீரரானார் ஜடேஜா.
ஸ்டோக்ஸ் பாதிப்பு
நான்காவது நாளில் இங்கிலாந்து சார்பில் 63 ஓவர் வீசப்பட்டன. வலது தோள்பட்டை வலி காரணமாக ஸ்டோக்ஸ் ஒரு ஓவர் கூட வீசாதது பாதிப்பை ஏற்படுத்தியது. நேற்றைய 5வது நாளில் வலியை பொருட்படுத்தாது, தொடர்ந்து 8 ஓவர் வீசி, சுப்மன் விக்கட்டை கைப்பற்றினார். ஆர்ச்சர், கார்ஸ் உள்ளிட்ட மற்ற பவுலர்கள் ஏமாற்றியதால், ஒன்றரை நாள் வாய்ப்பு இருந்தும் இங்கிலாந்து வெற்றி பெற தவறியது.
வெற்றிக்கு சமம்
இரண்டாவது இன்னிங்சின் முதல் ஓவரில் ஜெய்ஸ்வால் (0), சுதர்சன் (0) அவுட்டாக, இந்தியா 0/2 என தவித்தது. பின் சுப்மன், ராகுல் உள்ளிட்ட பேட்டர்கள் விடாமுயற்சியுடன் விளையாடி போட்டியை 'டிரா' செய்தனர். இது வெற்றிக்கு நிகரானது.
மேலும்
-
நான்கு கடைகளின் பூட்டை உடைத்து வில்லிவாக்கத்தில் சிறுவர்கள் அட்டகாசம்
-
வீடு புகுந்து நகை திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது
-
திருத்தணி தளபதி பள்ளி யோகாசனத்தில் சாம்பியன்
-
முருகன் கோவிலில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள் திருத்தணியில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
'டிரேடிங்' நிறுவனம் நடத்தி பண மோசடி: மூவர் கைது
-
பெண்ணிடம் வழிப்பறி காவாங்கரை நபர் கைது