'டிரேடிங்' நிறுவனம் நடத்தி பண மோசடி: மூவர் கைது

நீலாங்கரை:டிரேடிங் நிறுவனம் நடத்தி, பண மோசடி செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

பாலவாக்கம், பாரதி நகரை சேர்ந்தவர் மோஷேல் இஸ்மைல், 53. இவர், நீலாங்கரை போலீசில் அளித்த புகார் மனு விவரம்:

என் கணவர், 2018 முதல் 2021ம் ஆண்டு வரை, சிங்கப்பூரில் பணிபுரிந்தார். அப்போது, எங்கள் உறவினரான தேனாம்பேட்டையை சேர்ந்த பிலால் ஹெதர், 30, அவரது மனைவி ஆபிலா, 27, ஆகியோர், தாங்கள் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும், ஆசை வார்த்தை கூறினர்.

இதை நம்பி, 47.50 லட்சம் ரூபாய் காசோலையாகவும், ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கமாவும் கொடுத்தோம். என் சகோதரியின் கணவர் ரகமத் பேக் என்பவரும், 13 லட்சம் ரூபாய் கொடுத்தார்.

இந்த பணத்தில் குறிப்பிட்ட தொகையை, பிலாலின் கூட்டாளிகளான, ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம், 70, அவரது மகன் ஹரிஹரசுதன், 30, ஆகியோரும் வாங்கினர்.

ஆனால், இதுவரை லாபம் தராமல் இழுத்தடித்து வருகின்றனர். நாங்கள் செலுத்திய பணத்தையும் திருப்பி தரவில்லை. மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டு, அவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.

இவ்வாறு கூறியிருந்தனர்.

விசாரித்த நீலாங்கரை போலீசார், வழக்குப்பதிவு செய்து, நான்கு பேரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், பிலால் ஹெதர், ஹரிஹரசுதன், பன்னீர்செல்வம் ஆகியோர் சிக்கினர். இவர்களை கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான ஆபிலாவை தேடுகின்றனர்.

Advertisement