முருகன் கோவிலில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள் திருத்தணியில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருத்தணி,:வார விடுமுறை நாளான நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால், பொது வழியில் நான்கு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வார விடுமுறை நாளான நேற்று, மூலவரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு காவடிகளுடன் வந்தனர்.
பக்தர்கள் சிலர் மொட்டை அடித்து, அலகுகள் குத்தி காவடிகள் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். பொது வழியில் தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள், நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.
நுாறு ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு டிக்கெட் பெற்ற பக்தர்கள், இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். முன்னதாக, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர், வள்ளி - தெய்வானையுடன், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிறப்பு தரிசனம் மற்றும் பொதுவழி தரிசனத்தில் கோவில் நிர்வாகம் முறையாக ஏற்பாடுகள் செய்யவில்லை என, பக்தர்கள் குற்றம்சாட்டினர். திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், இன்ஸ்பெக்டர் மதியரசன் ஆகியோர் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.