நான்கு கடைகளின் பூட்டை உடைத்து வில்லிவாக்கத்தில் சிறுவர்கள் அட்டகாசம்

வில்லிவாக்கம்:வில்லிவாக்கத்தில், நான்கு கடைகளின் பூட்டை உடைத்து, சிறுவர்கள் திருட்டில் ஈடுபட்டனர்.
வில்லிவாக்கம், ரெட்ஹில்ஸ் சாலையைச் சேர்ந்தவர் கிட்டு, 60. இவர், வில்லிவாக்கம் சந்தையில் தேங்காய் கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி சென்றுள்ளார்.
நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதேபோல, எதிரில் சுரேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான முட்டை கடையிலும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
மேலும், தமோதர பெருமாள் கோவில், குளக்கரை தெருவில் சதீஷ்குமார், 40, என்பவரின் பூ மற்றும் பூஜை சாமான்கள் விற்கும் கடை மற்றும் சாந்தி, 55, என்பவரின் வளையல் கடையிலும் மர்மநபர்கள் பூட்டு உடைத்து திருட முயன்றுள்ளனர்.
அதிர்ச்சியடைந்த வியாபாரிகள், அவர்களின் கடைகளில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அப்போது, நேற்று அதிகாலை 2:00 மணியளவில், ஒரே வாகனத்தில் வந்த மூன்று சிறுவர்கள், ஒவ்வொரு தெருவாக நோட்டமிட்டுள்ளனர். பின், வாகனத்தில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து, முதலில் தேங்காய் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
அங்கு எதுவும் இல்லாததால், எதிரில் உள்ள முட்டை கடை பூட்டையும் உடைக்க முயற்சித்துள்ளனர். பின், அங்கிருந்து தாமோதர பெருமாள் கோவில் தெருவுக்கு சென்று, இரண்டு கடைகளின் பூட்டை உடைக்க முயன்றபோது, பொதுமக்கள் சத்தம் போடவே, கம்பியை கீழே போட்டு தப்பியோடி உள்ளனர்.
இந்த சம்பவத்தில், பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை என தெரிகிறது.
வில்லிவாக்கம் போலீசார், மர்மநபர்களை தேடி வருகின்றனர்.