தென்னை சார் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி; பிரிட்டனுடனான ஒப்பந்தத்தால் அதிகரிக்கும்

திருப்பூர்; ''இந்தியா - பிரிட்டன் இடையிலான வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதால்,தென்னை சார் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி வர்த்தகம் ஏற்றம் பெறும்'' என்று ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.

தென்னை சார் உணவுப்பொருட்கள் ஏற்றுமதியாளர் திருப்பூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் கூறியதாவது:

தேங்காயிலிருந்து 14 வகைபொருட்கள் தயாரித்து, உலகளாவிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். தினமும் 4 லட்சம் தேங்காயில் மதிப்பு கூட்டப்பட்டபொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

தேங்காய் நீர், தேங்காய் பால், கிரீம், தேங்காய் எண்ணெய், தேங்காய் துருவல், பவுடர், மாவு, டயட் பவுடர், தேங்காய் பாலில் ஐந்து வகை குளிர்பானங்கள் என, 11 வகை உணவுப்பொருட்கள் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, துபாய், பிரிட்டன் நாடுகள், தென்னை சார் உணவுப்பொருட்கள் ஏற்றுமதிக்கு மிக முக்கிய சந்தையாக உள்ளன.

8 முதல் 12 சதவீத வரி விதிப்பால், இலங்கை, இந்தோனேஷியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் நாடுகளுடனான போட்டியை எதிர்கொண்டு, பிரிட்டனுக்கான ஏற்றுமதியை அதிகரிப்பது சிக்கல் நிறைந்ததாக இருந்துவருகிறது.

நடப்பாண்டு நாட்டின் பல மாநிலங்களில் தேங்காய் மகசூல் பாதிக்கப்பட்டு, விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. இச்சூழலில், தென்னை சார் உணவு பொருட்களுக்கு, சர்வதேச சந்தையில் நிலவும் போட்டியை சமாளிக்கும் அளவு விலை நிர்ணயிப்பது சிக்கலாகிறது.

போட்டி நாடுகளை எதிர்கொண்டு, அடுத்தடுத்து புதிய ஏற்றுமதி ஆர்டர்களை கைப்பற்றமுடிவதில்லை. பிரிட்டனுடன் வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதால், இயற்கை விவசாயத்தை ஆதரித்து, மதிப்பு கூட்டு பொருட்களை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்களுக்கு, சாதகமான சூழல் உருவாகியுள்ளது.

இந்திய உணவுப் பொருட்களுக்கு, அந்நாட்டு சந்தையில் விதிக்கப்படும் வரி, குறைக்கப்படும். இதனால், பிரிட்டன் சந்தையில், இந்திய உணவுப் பொருட்களின் விலை குறைந்து, போட்டி சந்தையில் நாம்முன்னிலை வகிக்க முடியும்.

அதிகளவில் ஆர்டர்களை கைப்பற்றி, பிரிட்டனுக்கான தென்னை சார் உணவுப்பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.

திட்டமிட்டபடி உற்பத்தியை பெருக்கி, பரந்த சந்தை வாய்ப்புகளை கைப்பற்றமுடியும்.

மத்திய அரசு இதுபோன்ற ஒப்பந்தங்களை தொடர்ந்து மேற்கொண்டு, நாட்டின் உணவுப்பொருட்கள் ஏற்றுமதியை மென்மேலும் வளர்ச்சி பெறச்செய்யவேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement