கார்ப்பரேஷன், வாரியங்களின் தலைவர்கள் பட்டியல் தயார்!; எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் வாரிசுகளுக்கு முக்கியத்துவம்

காங்கிரஸ் அரசு அமைந்து, இரண்டரை ஆண்டுகள் நெருங்கியும், கார்ப்பரேஷன், வாரியங்களின் தலைவர் பதவிகளை முழுமையாக நிரப்ப முடியவில்லை. இன்னும் 40 கார்ப்பரேஷன், வாரியங்களுக்கு தலைவர்கள், உறுப்பினர்கள், இயக்குநர்களை நியமிக்க வேண்டியுள்ளது.

அமைச்சர் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருந்த சில எம்.எல்,ஏ.,க்களுக்கு கார்ப்பரேஷன், வாரியங்களின் தலைவர் பதவி வழங்கி, சமாதானம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு அமைச்சர் பதவிக்கு நிகரான அந்தஸ்து, சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.

பாக்கியுள்ள கார்ப்பரேஷன், வாரியங்களின் தலைவர்கள். நியமனம் தொடர்பாக, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், மாநில காங்., பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, சில நாட்களுக்கு முன் டில்லியில் ஆலோசனை நடத்தினர்.

அன்றைய கூட்டத்தில், நியமன பட்டியலுக்கு சுர்ஜேவாலா கிரீன் சிக்னல் காட்டியதாக, தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர், துணை முதல்வர், சில எம்.எல்.ஏ.,க்கள் சிபாரிசு செய்தவர்களின் பெயர்களும் பட்டியலில் உள்ளன.

கார்ப்பரேஷன், வாரியங்களின் தலைவர்கள் நியமனத்தை விட, உறுப்பினர்கள், இயக்குநர்களை நியமிப்பது, காங்., மேலிடத்துக்கு தலைவலியாக உள்ளது. ஒவ்வொரு கார்ப்பரேஷன், வாரியங்களுக்கும் எம்.எல்.ஏ.,க்கள் மூன்று, நான்கு பேர்களை சிபாரிசு செய்துள்ளனர்.

லிங்காயத் மேம்பாட்டு வாரியத்துக்கு, குருபர் சமுதாயத்தினரின் பெயர்கள், காகினெலே மேம்பாட்டு வாரியத்துக்கு தலித் சமுதாயத்தினர் பெயரை சிபாரிசு செய்து, குழப்பத்தை ஏற்படுத்தினர். சுர்ஜேவாலாவுடன் நடந்த ஆலோசனையில், இத்தகைய குழப்பத்தை முதல்வர் சித்தராமையா கண்டறிந்து, சரி செய்தார்.

கார்ப்பரேஷன், வாரியங்களின் நியமனத்தை மேலிடம் கையில் எடுத்ததை அறிந்த பல தலைவர்கள், பிரமுகர்கள் பதவிக்காக முயற்சிக்கின்றனர். முதல்வர், துணை முதல்வரை சந்தித்து கட்சிக்காக உழைத்த எங்களுக்கும், ஒரு வாய்ப்பு தாருங்கள் என, மன்றாடுகின்றனர். இதனால் முதல்வர், துணை முதல்வர் தர்மசங்கடத்தில் சிக்கியுள்ளனர். முதலில் தலைவர்களை நியமித்த பின், இயக்குனர்கள், உறுப்பினர்களை நியமிக்க முடிவு செய்துள்ளனர்.

கார்ப்பரேஷன், வாரியங்களின் தலைவர்கள் பட்டியலுக்கு, முதல்வரும், துணை முதல்வரும் சிலரது பெயர்களை சிபாரிசு செய்துள்ளனர். கூட்லகி எம்.எல்.ஏ., சீனிவாஸ், மாயகொண்டா எம்.எல்.ஏ., பசந்தப்பா, காங்கிரஸ் பொது செயலர்கள் ஆகாசுல்தான், சதீஷ், வினய் நவலகட்டி, முத்து கங்காதர், எம்.எல்.ஏ., வினய் குல்கர்னியின் மனைவி சிவலீலா, எம்.எல்.ஏ., - எம்.ஒய்.பாட்டீலின் மகன் அருண் பாட்டீல், தாவணகெரே மாவட்ட காங்கிரஸ் தலைவர் மஞ்சப்பா, முன்னாள் எம்.எல்.ஏ., ராமப்பா உட்பட, பலரின் பெயர்கள் உள்ளன.

இன்னும் சில நாட்களில், நியமன பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இப்பட்டியல் கட்சி மற்றும் அரசில், மற்றொரு சலசலப்புக்கு காரணமாகக்கூடும்.

ஏன் என்றால் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சிக்காக உழைத்த தலைவர்கள், பிரமுகர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.

'ஒவ்வொரு பதவிகளையும், எம்.எல்.ஏ.,க்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் கொடுத்தால், நாங்கள் என்ன செய்வது. எங்களுக்கு பதவி வேண்டாமா. கட்சியை பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தியதில், எங்களுக்கும் பங்குள்ளது என, முணுமுணுக்கின்றனர்.

'கார்ப்பரேஷன், வாரியங்களின் இயக்குநர், உறுப்பினர்களை நியமிக்கும் போது, எங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளனர்.

காங்., மேலிடத்துக்கும் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவி வழங்க ஆர்வம் உள்ளது. ஆனால் எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி, தங்கள் குடும்பத்தினரை பதவியில் அமர்த்துகின்றனர்.

Advertisement